திருத்துறைப்பூண்டி, நவ.30: காசி வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்னை, திருத்துறைப்பூண்டி வழியாக நிரந்தர இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரம் தீவிற்கு புதிய செங்குத்தான லிப்ட் ரயில்வே கடல் பாலம் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் இந்த புதிய பாம்பன் பாலத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திறக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. புதிய பாம்பன் பாலம் திறக்கப்படுவதால் ராமேஸ்வரத்தில் இருந்து பல ரயில்களை ரயில்வேதுறை இயக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரயில் பயணிகளிடம் எழுந்துள்ளது.
இந்தியாவின் தெற்கு பகுதியான ராமேஸ்வரத்தையும், வடக்கு பகுதியான காசி, வாரணாசியை இணைக்கும் வகையில் இந்த ரயில் வழித்தடம் இருப்பதால் சென்னை, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக சிவ பக்தர்கள் சிவ வழிபாடு செய்வதற்காக காசி, ராமேஸ்வரம் செல்வதை வாழ்க்கையில் குறிக்கோளாகக் கொண்டு பயணம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக ரயில்வழி பயணத்தை பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர். குறைவான கட்டணத்தில் அதிக வசதிகளுடன் பாதுகாப்பான பயணமாக ரயில் பயணம் இருப்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரயில் பயணத்தை விரும்பி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். திருத்துறைப்பூண்டி-ராமேஸ்வரம் செல்கின்ற ரயில்பாதையானது மிகவும் தொன்மையான பாரம்பரியமிக்க ரயில் வழித்தடமாகும்.
இப்படி சிறப்பு வாய்ந்த ரயில் பாதையில் காசி- வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில்களை இயக்க வேண்டும். ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறக்க இருக்கின்ற இந்த தருணத்தில் புதிய தினசரி ரயிலை இயக்க வேண்டுமென பொதுமக்களும் ரயில் உபயோபகிப்பாளர்களும், வர்த்தக சங்கத்தினர், சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் சங்கத்தினர், சிவனடியார்கள் திருக் கூட்டத்தினர் போன்ற பல்வேறு அமைப்புகளில் இருந்து வேண்டுகோள் வந்து உள்ளது. திருவாரூர் – காரைக்குடி அகலரயில் பாதை பணி ரூ.1,000 கோடி செலவில் 2018 மற்றும் 2019ம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது.
ஆனால் ஐந்து வருடங்கள் ஆகியும் திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னைக்கு நேரடியாக நிரந்தர இரவுநேர ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்படவில்லை. 120 வருடங்கள் பாரம்பரியமான போட் மெயிலில் இருந்து இரண்டு ரயில் பெட்டிகள் மயிலாடுதுறையில் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை -காரைக்குடி பாஸ்ட் பாசஞ்சரில் இணைக்கப்பட்டு திருவாரூர் -பட்டுக்கோட்டை -காரைக்குடி வரை இயக்கப்பட்டது. 1980ம் ஆண்டு முதல் மனோரா எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்ட ரயில் சென்னை -எழும்பூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு இயக்கப்பட்டது. பின்பு மனோரா எக்ஸ்பிரஸ் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டது.
திருவாரூர்- காரைக்குடி அகல ரயில்பாதை பணிகள் நடைபெறுவதை காரணம் காட்டி இந்த தடத்தில் ஓடிக்கொண்டிருந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்காலுக்கு மாற்றப்பட்டு காரைக்காலில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு தினமும் இயக்கப்பட்டு வருகிறது. அகலரயில் பாதைக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடியிலிருந்து, திருத்துறைப்பூண்டி வழியாக மீண்டும் இயக்கப்படவில்லை என்பது பெரிய குறைபாடாக உள்ளது. இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் மிகக் குறைந்த கட்டணமே ரயில்வே துறையால் படுக்கை வசதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், ஏழை விவசாய கூலித் தொழிலாளர்களும், மீனவர்களும் குறைந்த பயண கட்டணத்தில் வசதியுடன் கூடிய இரவு நேர ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக ராமேஸ்வரம், ராமநாதபுரம், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, காவிரி டெல்டா பகுதி மக்களுக்கு நிரந்தர இரவு நேர விரைவு ரயில் இயக்கப்படவில்லை என்பது பொதுமக்களுக்கு பெருத்த குறைபாடாக உள்ளது என ரயில் பயண நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ரயில்வேதுறை, ரயில் பயணிகள் போக்குவரத்து ஆய்வறிக்கைகள் மிகுந்த லாபகரமான ரயில் தடமாக ராமேஸ்வரம் சென்னை -ரயில்பாதை விளங்கும் என அறிவித்து உள்ளது. ஆகையால் ரயில்வே வாரியம் உடனடியாக செயல்பட்டு ஏழை மீனவர்கள், விவசாயிகள் அதிகம் வசிக்கும் ராமேஸ்வரம், ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்ட கடைமடை காவிரி டெல்டா பகுதிகளான
திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக காசி வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இருந்து நேரடியாக செல்வதற்கு விவசாய குடிமக்களின் நன்மைக்காகவும், ஏழை, எளிய, மக்கள் பயனடையுமாறு நிரந்தர இரவு நேர ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வாரணாசியிலிருந்து சென்னை, திருத்துறைப்பூண்டி வழியாக ராமேஸ்வரத்திற்கு நிரந்தர இரவுநேர விரைவு ரயில் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.
