×

மயிலாடுதுறை கலெக்டர் அழைப்பு நிலக்கடலையில் அதிக மகசூல் பெற சான்று பெற்ற விதை அவசியம்

நாகப்பட்டினம், நவ.30: நிலக்கடலையில் அதிக மகசூல் பெற சான்று பெற்ற தரமான விதைகளை நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நாகப்பட்டினம் விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் விஜயகுமார், நிலைய வேளாண்மை அலுவலர் பிரசன்னா ஆகியோர் தெரிவித்திருப்பதாவது:
வேளாண்மையில் நிரந்தர உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு விதை தான் அடிப்படை இடுபொருளாகும். உழவர்களுக்கு தரமான விதைகள் கிடைக்க செய்வதற்காக தமிழ்நாடு அரசு விதை சான்றளிப்பு துறையின் கீழ் விதை சான்றளிப்பு, விதை ஆய்வு, விதைப் பரிசோதனை மற்றும் பயிற்சி ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். நடப்பு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நிலக்கடலை சாகுபடி பரவலாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மாவட்டங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் டிஎம்வி7, விஆர்ஐ2, விஆர்ஐ3, டிஎம்வி 13, டிஎம்வி 14 ஆகிய விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் ரசீது பெற்று வாங்கி பயன்படுத்த வேண்டும். விதைதேர்வு, சாகுபடி முறை மற்றும் மண்பரிசோதனை ஆகியவற்றில் கவனமாக இருக்கும் விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள நிலக்கடலை விதைகளை முளைப்புத் திறன் பரிசோதனை செய்து பயிரிடுவது மிகவும் அவசியம்.

விவசாயிகள் தங்கள் கையிருப்பில் உள்ள நிலக்கடலை விதைகளில் 500 கிராம் அளவு விதை மாதிரியாக எடுத்து தங்களின் பெயர், முகவரி மற்றும் விதைப் பரிசோதனை கட்டணமாக ரூ.80 மட்டும் செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவில் இயங்கி வரும் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து முளைப்புத்திறன் அறிந்து தரமான விதைகளை மட்டும் விவசாயிகள் பயன்படுத்தி அதிகமகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மயிலாடுதுறை கலெக்டர் அழைப்பு நிலக்கடலையில் அதிக மகசூல் பெற சான்று பெற்ற விதை அவசியம் appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara ,Nagapattinam ,Mayiladudura ,Dinakaran ,
× RELATED போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கில்...