×

ஜனவரி 7, 8ம் தேதியில் நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம்:  அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு  ₹822.83 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருவள்ளூர், நவ. 30: சென்னையில் ஜனவரி 7, 8ம் தேதியில் நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கில் அமைச்சர், கலெக்டர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். கலெக்டர் த.பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், மாதவரம் எஸ்.சுதர்சனம், மதுரவாயல் க.கணபதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சேகர் அனைவரையும் வரவேற்றார்.

இந்த கருத்தரங்கில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் கருப்பொருளானது “மீள் திறனுடன் நீடித்து நிலைக்கதக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும். இந்த முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரைவாக உரிய காலத்தில் பெற்றிட ஒற்றை சாளர தகவு வழியாக பெற்றுத் தர மாவட்ட தொழில் மையம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் நிலவும் தொழில்துறைக்கு உகந்த சூழல் அமைப்பு மேம்பட்ட உட்கட்டமைப்பு திறமை வாய்ந்த பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிக ரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவற்றை தொழில்துறையில் முதலீடு செய்வதற்கு சிறந்த வாய்ப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான நமது அரசு வழங்கி வருகிறது. விண்வெளி தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், ஜவுளி தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு துறைகள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவை பெற்று முதலீட்டு வாய்ப்புகள் பெற்றிட உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முக்கிய தளமாக செயல்படும்.

இந்த கருத்தரங்கத்தில், ₹822.83 கோடி மதிப்பீட்டில் 3,912 வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 நிறுவனங்களின் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த கருத்தரங்கத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்த 400 மஞ்சப்பைகளை அமைச்சர் ஆர்.காந்தி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வ.ராஜவேல், முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஜனவரி 7, 8ம் தேதியில் நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம்:  அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு  ₹822.83 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Level ,Global Investors Conference ,Thiruvallur ,World Investors Conference ,Chennai ,Dinakaran ,
× RELATED தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மசியில் தேசிய அளவிலான கருத்தரங்கு