×

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் ஆதிபுரீஸ்வரருக்கு மீண்டும் கவசம் சாத்தப்பட்டது

திருவொற்றியூர், நவ. 30: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மூலவர் ஆதிபுரீஸ்வரர் மீது அணிவித்திருக்கும் தங்க முலாம் நாக கவசம் ஆண்டிற்கு ஒருமுறை கார்த்திகை தீபம் அன்று முதல் மூன்று நாட்கள் மட்டும் திறக்கப்படும். அன்று பக்தர்களுக்கு கவசமின்றி மூலவர் காட்சி அளிப்பார். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விசேஷ பூஜைகள் செய்து கவசம் திறக்கப்பட்டது. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் 3 நாட்களும் பக்தர்கள் குடை பிடித்தபடி வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி- தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், துர்கா ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டலக் குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, நேதாஜி கணேசன், திமுக மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், திரைப்பட நடிகர் லாரன்ஸ் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு வரை மட்டுமே, ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் நேற்று முன்தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இரவு 11 மணிக்கு மீண்டும் ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் சாத்தப்பட்டது. இந்த 3 நாட்களில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய திருவொற்றியூருக்கு திரண்டனர்.

The post திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் ஆதிபுரீஸ்வரருக்கு மீண்டும் கவசம் சாத்தப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Adhipureeswarar ,Tiruvottiyur Vadudayamman temple ,Tiruvottiyur ,Thiruvotiyur Thyagaraja Swami Udanurai Vadudayamman temple ,Adipureeswarar ,Thiruvotiyur Vadudayamman temple ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...