×

திருவெண்ணெய்நல்லூரில் பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

திருவெண்ணெய்நல்லூர், நவ. 30: திருவெண்ணைநல்லூரில் பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறிய கிராம மக்கள் சாலை மறியல் செய்து காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாவாடை மனைவி கனகாம்பரம் (55). இவர் மாடுகளை பல்வேறு இடங்களில் மேய்ப்பது வழக்கம், இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் திருவெண்ணெய்நல்லூர் மலட்டாற்று பகுதிக்கு மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மாடுகளை ஓட்டிச் சென்ற கனகாம்பரம் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் ஆற்றுப்பகுதிக்கு சென்று ேதடி பார்த்தனர். பின்பு ஆற்று பகுதியில் தோண்டப்பட்டுள்ள பழமையான கிணறு அருகே கனகாம்பரம் வைத்திருந்த வெற்றிலை பாக்கு, பை, குடை, மற்றும் காலணிகள் ஆகியவை இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அவர்கள் விரைந்து வந்து பாழடைந்த கிணற்றில் தேடி பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அதே மலட்டாறு பகுதியில் கனகாம்பரம் சடலமாக கிடந்தார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காந்திக்குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திருவெண்ணைநல்லூர் கள்ளுக்கடை மூலை கடலூர் சாலையில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் அதை ஏற்காத பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post திருவெண்ணெய்நல்லூரில் பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Thiruvenneynallur ,Thiruvennainallur ,
× RELATED வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் காயம்