×

நெருங்கி வருகிறது தைப்பூசம் பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைமேடை பகுதிகளில் சேதம் சீரமைக்க கோரிக்கை

பழநி, நவ. 30: தைப்பூச திருவிழா நெருங்கி வரும் நிலையில் பழநி கோயிலுக்கு பாதாயத்திரையாக வரும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட நடைமேடை பல்வேறு பகுதிகளில் சேதமடைந்து காணப்படுகிறது. அதனை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா வரும் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது. எனினும் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை காரணமாக, இம்மாத இறுதியிலேயே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கி விடுவர். தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் ஒன்று பழநி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை. எனவே, சுமார் ரூ.12 கோடி மதிப்பீட்டில் இச்சாலையோரத்தில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக நடைமேடை அமைக்கப்பட்டது. இந்த நடைமேடைகள் தற்போது புதர் மண்டி, செடி, கொடிகள் முளைத்து சேதமடைந்து காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறையினர் பக்தர்கள் பாதயாத்திரையை துவங்குமுன் சேதமடைந்த நடைமேடைகளை சீரமைத்து, அதில் முளைத்திருக்கும் புதர்கள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற வேண்டுமென பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெருங்கி வருகிறது தைப்பூசம் பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைமேடை பகுதிகளில் சேதம் சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thaipusam ,Palani ,Palani Temple ,Thaipur ,Taipusam Padayathira ,Dinakaran ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்