×

பெயரை தேடி வில்லங்க சான்று வழங்க பதிவுத் துறை மென்பொருளை தரம் உயர்த்த ஐகோர்ட் உத்தரவு

மதுரை: பெயர் வில்லங்க சான்று வழங்கிட ஸ்டார் 2.0 மென்பொருளை 3.0 ஆக தரம் உயர்த்த வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது கணவரின் பிரிக்கப்படாத சொத்துக்களின் மீது ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பெயர் வில்லங்கம் தேடுதல் மேற்கொண்டு சான்று கேட்டு விண்ணப்பித்தேன். இதற்கு ஸ்டார் 2.0 மென்பொருளில் பெயர் தேடுதல் வசதி அளிக்கப்படவில்லை என பதிவுத்துறை டிஐஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ரத்து செய்து பெயரைக் கொண்டு தேடும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்து மென்பொருளை தரம் உயர்த்த வேண்டும். அதனடிப்படையில் பெயர் வில்லங்க சான்று வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘பதிவுத்துறை விதிகளின்படி, தனிப்பட்ட ஒருவரின் பெயரில் வில்லங்க சான்று வழங்க வேண்டும். இதை தரும் ெமன்பொருள் வசதி இல்லை என அதிகாரிகளால் கூறமுடியாது. அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த வசதி இருக்க வேண்டும். பெயர் மூலம் தேடுவது என்பது சம்பந்தப்பட்டவரை அடையாளம் காண உதவும்’’ என கூறப்பட்டது.

இதையடுத்து அரசு கூடுதல் பிளீடர் பி.சரவணன் ஆஜராகி, ‘‘பெயர்களின் மூலம் தேடி கண்டறியும் வகையில் ஸ்டார் 2.0 மென் பொருளை, ஸ்டார் 3.0 மென்பொருளாக தரம் உயர்த்தி மாற்றங்கள் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘ஸ்டார் 2.0 மென்பொருளை 3.0 ஆக தரம் உயர்த்தி தேவையான மாற்றங்கள் செய்வதற்கான பணிகளை பதிவுத்துறை தரப்பில் உடனடியாக மேற்கொண்டு 8 வாரத்தில் முடிக்க வேண்டும். மென்பொருள் தரம் உயர்த்தப்பட்ட பிறகு பதிவுத்துறை விதிகளின் படி பெயர் வில்லங்க சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

The post பெயரை தேடி வில்லங்க சான்று வழங்க பதிவுத் துறை மென்பொருளை தரம் உயர்த்த ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,
× RELATED பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!!