×

பெரியபாளையம் அருகே ஆரணியாற்று வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் மூழ்கியது

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இன்று காலை அங்குள்ள தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. இதனால் அந்த ஆற்றை கடக்க, தரைப்பாலத்தில் 1 அடி உயரத்தில் செல்லும் வெள்ளநீரில் மக்கள் அபாய நிலையில் கடந்து செல்கின்றனர். அங்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படுமா என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் கடந்த சில நாட்களாக பரவலாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரணியாற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆரணியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆரணியின் அருகே புதுப்பாளையம், காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் இன்று காலை வெள்ள நீரில் மூழ்கிவிட்டது.

இதேபோல் மங்களம் கிராமத்துக்கு செல்ல ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த தற்காலிக் மண்பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தரைப்பாலத்தின்மீது சுமார் 1 அடி உயரத்துக்கு வெள்ளநீர் செல்கிறது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும், அந்தத் தரைப்பாலத்தின் வழியே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அபாயநிலையில் கடந்து செல்கின்றனர்.

பெரியபாளையம் பகுதிகளில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டால் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக 10 கிமீ சுற்றி வரவேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் புதிதாக மேம்பாலம் அமைத்து தரப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது. எனினும், அங்கு ஆரணி ஆற்றின் குறுக்கே புதிதாக மேம்பாலம் அமைக்கப்படுமா என அப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

The post பெரியபாளையம் அருகே ஆரணியாற்று வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் மூழ்கியது appeared first on Dinakaran.

Tags : Araniattu ,Periyapalayam ,Araniyar ,Araniyartu ,Dinakaran ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...