நன்றி குங்குமம் டாக்டர்
சமீபத்தில் வெளியான விஜய் ஆன்டனியின் கொலை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் மீனாட்சி செளத்ரி. இதற்கு முன்பு, அவுட் ஆப் லவ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இது தவிர, கில்லாடி, ஹிட் ஆகிய படங்களிலும் நடித்துள்ள மீனாட்சி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக தளபதி 68 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், கோகுல் இயக்கத்தில், சிங்கப்பூர் சலூன், மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மீனாட்சி, ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 2018 -ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் ரன்னர் பட்டத்தையும் வென்றுள்ளார். இவர், தனது பிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை:
வொர்க்அவுட்: நான் ராணுவ குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால், தினசரி உடற்பயிற்சி குறித்த அவசியத்தை அப்பா அவ்வப்போது வலியுறுத்திக் கொண்டே இருப்பார். அதுவே, நாளடைவில் பழகியும் விட்டது. எனவே, எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தினசரி உடற்பயிற்சிகள் செய்வதையோ அல்லது யோகா செய்வதையோ ஒருநாளும் தவிர்ப்பதில்லை. பொதுவாக, உடற்தகுதியை ஒரு ஃபேஷனாக பார்க்காமல், ஒருவரின் வழக்கமான ஒரு பகுதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஃபிட்டாக இருக்க முடியும். மேலும், ஒவ்வொருவருமே தினசரி சிறுசிறு உடற்பயிற்சிகளாவது செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முடியும்.
ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஃபிட்னெஸூக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். காலையில ஒரு மணி நேரம் ஜாகிங், அதன் பிறகு வெயிட் லிஃப்டிங், கார்டியோ பயிற்சிகள், திரெட்மில் பயிற்சிகள் போன்றவை இருக்கும். இதுதவிர, ஓய்வு நேரங்களில் பேட்மிட்டன் விளையாடுவது, நீச்சல் பயிற்சி செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளேன்.
டயட்: சரிவிகித உணவிற்கே நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். இதுவும் அப்பாவின் அறிவுரையே, அந்தவகையில், எங்கள் வீட்டில் எப்போதும் ஆரோக்கியமான உணவுக்கே அதிகம் முக்கியத்துவம் இருக்கும். எனவே, சிறு வயது முதலே பொரித்த உணவுகள், ஜங்க் ஃபுட் எல்லாம் பெரும்பாலும் சாப்பிட்டதில்லை. காலையில், எழுந்ததும், 3-4 டம்ளர் வெதுவெதுப்பான நீரை அருந்திவிட்டுதான் அந்த நாளை தொடங்குவேன். பின்னர், வேக வைத்த முட்டை, கொஞ்சம் பழங்கள் எடுத்துக் கொள்வேன். பின்னர், காலை உணவிற்கு, முளைக்கட்டிய பயிறு வகைகள், ஓட்ஸில் சமைத்த உணவுகள் இருக்கும். மதிய உணவில், கிரில்ட் காய்கறிகள் சாலட் போன்றவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வேன். இரவில், பருப்பு, ரொட்டி மற்றும் சப்ஜி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அரிசி சாதத்தை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.
அதுபோன்று, வாரத்தில் ஒருநாள் மூன்று வேளையும் பழங்கள் மட்டும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இது வயிற்றைச் சுத்தமாக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே பால் சேர்த்த டீ குடிப்பேன். மற்ற நேரமெல்லாம் பிளாக் டீ அல்லது கிரீன் டீதான். அதேமாதிரி, பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுவேன். இல்லை என்றால், ஜூஸ் மட்டும்தான் குடிப்பேன்.
எப்போதும், வீட்டில் மிளகு, சீரகம், இஞ்சி எல்லாம் சேர்த்து சமைக்கிற உணவு வகைகளே உடலுக்கு ரொம்ப நல்லது. அதாவது, ரசம், சூப் மாதிரியான உணவு வகைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடுவது மூலமாக செரிமானக் கோளாறுகள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
அதுபோன்று தினமும் சாப்பிடும்போது எவ்வளவு கலோரிகளை எடுத்துக் கொள்கிறோம் என்பதை அறிந்து சாப்பிடுவது நல்லது. இதனால், அளவுக்கு அதிகமான கலோரிகளை எடுத்துக் கொண்டு உடல் எடை கூடுவதை தவிர்த்துக் கொள்ள முடியும். எல்லோருமே இந்த முறையை பின்பற்றி சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பியூட்டி: அழகு பராமரிப்பில், தினசரி, நிறைய தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது, படுக்கைக்குச் செல்வதற்கு முன் மேக்கப்பை அகற்றுவதையும் கட்டாயமாக வைத்திருக்கிறேன். மற்றபடி, முகத்துக்கு ஆலிவ் ஆயில் தடவி 15 நிமிடம் ஊறவிட்டு பின்புதான் குளிக்கச் செல்வேன். இப்படி செய்வது சரும வறட்சியைப் போக்க உதவுகிறது. சருமம் வறட்சி இல்லாமல் இருந்தாலே பார்க்க பொலிவாக இருக்கும். ஷூட்டிங் இல்லாத நேரங்களில், கண்ணுக்கு காஜல், கொஞ்சமா லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வது இவை எனது பெரிய மேக்கப்பே.
தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்
The post மீனாட்சி சௌத்ரி ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.