×

சாதி வாரி கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம் 1931ம் ஆண்டு 30 கோடியாக இருந்த மக்கள் தொகை 140 கோடியாக உயர்வு

*திருப்பதி கலெக்டர் பேச்சு

திருப்பதி: திருப்பதியில் நடந்த சாதி வாரி கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டத்தில் 1931ல் 30 கோடியாக இருந்த மக்கள் தொகை இன்று 140 கோடியாக உயர்ந்துள்ளது என்று கலெக்டர் வெங்கடரமணா பேசினார்.திருப்பதி பத்மாவதி பல்கலைக்கழக அரங்கத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வெங்கடரமணா தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி பேசியதாவது:

நமது நாட்டில் 1872ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. 1931ல் ஜாதிவாரி கணக்கீடு உட்பட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிற்காலத்தில் எஸ்சி, எஸ்டி சாதிகள் தவிர மற்றவை பொதுப்பிரிவின்கீழ் கணக்கிடப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 100 சதவீதம் அதிகரித்திருக்கும். அதுமட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாக உண்மையான சாதிகளின் மக்கள் தொகையை நிர்ணயம் செய்ய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கி உள்ளது. 1931ல் 30 கோடியாக இருந்த நம் நாட்டின் மக்கள் தொகை இன்று 140 கோடியாக உள்ளது.

சாதிகளின் மக்கள்தொகையை கணக்கிட்டு தற்போதைய சாதிகளின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அறிந்து தகுந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கான அரசு திட்டங்களை வடிவமைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், பல்வேறு சமூகங்களின் தலைவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த கோரிக்கைகளையும் பரிசீலித்து அறிக்கையை மாநில அரசிடம் சமர்பிப்போம். 2021ம் ஆண்டு ஜாதி மக்கள்தொகை கணக்கெடுப்புடன் 2021ம் ஆண்டு பொதுமக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஆந்திர மாநில சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசுக்கு பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.இதனை தொடர்ந்து, சித்தூர் எம்பி ரெட்டிப்பா பேசுகையில், ‘நலிந்த பிரிவினரிடையே உள்ள இடைவெளிகளை நீக்க வேண்டும். இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறுவது சமத்துவ சமுதாயத்தை அமைப்பதற்கு உதவும்’ என்றார்.கூட்டத்தில் திருப்பதி, நெல்லூர், கடப்பா, அன்னம்மையா, சித்தூர் மாவட்டங்களை சேர்ந்த சமூக நலத்துறை அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சாதி வாரி கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம் 1931ம் ஆண்டு 30 கோடியாக இருந்த மக்கள் தொகை 140 கோடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Caste-wise Census Consultative Meeting ,Tirupathi ,Tirupati ,
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...