×

திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்?: ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் கேள்வி

சென்னை: திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? என ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா அமீரை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். அந்த பேட்டியில் பேசிய ஞானவேல், பருத்திவீரன் படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் அமீர் அதிகமாக கணக்கு காட்டி என்னிடம் பணத்தை ஏமாற்றி விட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்கவேண்டும். ஆனால், அவர் அதனை திருடி சம்பாதிக்கிறார் என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.

பிறகு இது பற்றி அமீரும் அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருந்தார். பருத்தி வீரன் படப் பிரச்சனையில் அமீர் பற்றி ஞானவேல் ராஜா முன்வைத்த விமர்சனம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இயக்குனர்கள் பாரதிராஜர், சமுத்திரக்கனி, சசிகுமார், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் ஞானவேல்ராஜா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து கண்டனம் வலுத்த நிலையில் அமீர் பற்றிய பேச்சுக்காக மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல்ராஜா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், பருத்திவீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என கூறியுள்ளார்.

அமீர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்ட நிலையில், இயக்குனர் சசிகுமார் கேள்வி எழுதியுள்ளார். இதுகுறித்து சசிகுமார் வெளியிட்டுள்ள செய்தியில், “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? ‘நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்…’ என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்’ என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்?: ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் கேள்வி appeared first on Dinakaran.

Tags : SASIKUMAR ,GHANAVEL ,Chennai ,Sashikumar ,Gnanavel Raja ,
× RELATED ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி