×

பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் கட்டடங்களில் உள்கட்டமைப்பின் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில், பொதுப்பணித்துறையில் மூலம் கட்டப்படும் கட்டடங்களில், “உள்கட்டமைப்பின் நவீன தொழில்நுட்பம்“ குறித்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தும், “கட்டட மலர்“ காலாண்டு இதழை வெளியிட்டும், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார்கள்.

மனித வரலாற்றில் சக்கரம் கண்டுபிடித்த நாள் ஒரு திருப்பு முனை, மனித உழைப்பை எளிதாக்கியது அந்தக் கண்டுபிடிப்புத்தான், பொறியியலின் தொடக்கமும் அதுதான், பொறியியல் என்பதே மனிதனின் இடர்பாடுகளைக் குறைப்பதுதானே, தொடக்கத்தில் பொறியியலில் இரண்டே பிரிவுகள் இருந்தன, ஒன்று போர்ப் பொறியியல், இன்னொன்று மக்களுக்கான பொறியியல். இரண்டாவது சொன்னதுதான், சிவில் இன்ஜினியரிங் – நீங்கள் படித்த பாடம், அந்த சிவில் இன்ஜினியரிங் இன்று நூற்றுக்கணக்கில் பிரிந்து மனிதனுக்குத் தொண்டாற்றி வருகிறது.

மனிதன் வளரும் போது, தேவைகள் பெருகுகின்றன. தேவைகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டுகின்றன. மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது, பொதுப் பொறியியல்தான். உள்கட்டமைப்பு ஒரு நாட்டின் வலிமையை அடுத்தவர்களுக்கு உணர்த்துவது என்பதால், அது வலிமையாகவும்-புதியதாகவும் இருக்க வேண்டும். மக்கள் பெருக்கம் ஒரு சவாலாக இருந்து வருகிறது. மக்கள் பெருக்கத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது அவசியம். அதற்கு பொறியியல் மட்டுமே உதவும் என்றும் மாண்மிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

பொதுப்பணித்துறை தமிழகத்தின் பழமையான துறையாகும். இத்துறை 1858ம் ஆண்டு துவக்கப்பட்டது. 165 ஆண்டு பழமையானது. பொதுப்பணித்துறையில் இருந்து தான், பல்வேறு துறைகள் பிரிந்தன. 1905ல் இரயில்வே துறை, 1934ல் மின்சாரத் துறை, 1946ல் நெடுஞ்சாலைத் துறை, 1961ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், 1970ல் குடிசை மாற்று வாரியம், 1971ல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், 1978ல் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மற்றும் 2021இல் நீர்வளத்துறை இப்படி பல துறைகள் பிரிக்கப்பட்டன என்று குறிப்பிட்டார்கள்.

கட்டடங்களாக தமிழ்நாட்டில் மூலதனச் சொத்துகளை உருவாக்குவதும், அவற்றைப் பராமரிப்பதும் இத்துறையின் முதன்மையான பணியாகும். சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டிட மாநிலம் முழுவதும், இத்துறை கணினிமயமாக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் மற்றும் அதன் கருவிகள் தொடர்பான தொழில்நுட்ப முறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இந்த ஆராய்ச்சிகள் வழியாக, வளங்களைப் பெருக்கிட முனைகிறது; பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டினைக் கட்டுப்படுத்த வழிவகை செய்கிறது; பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை மறுசீரமைப்பு செய்து, புதுப்பிக்கிறது; அரசின் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் வருகை தொடர்பான நிகழ்வுகளின்போது, கட்டுமானம் மற்றும் மின் பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொள்கிறது; மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக – மாநிலத்தின் கட்டட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், நமது மாநிலத்தைத் தன்னிறைவு பெறச் செய்கிறது; என்பதை எடுத்துரைத்தார்கள்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் உதவியுடன் தொடக்கம் முதல் இறுதி வரை, ஒப்படைக்கப்பட்ட பணிக்கான செயல்பாடுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், நீதிமன்றக் கட்டடங்கள், மாவட்ட ஆட்சியரகங்கள், பள்ளிகள், விடுதிக் கட்டடங்கள், பிற அரசுத் துறைகளுக்கான அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுக் கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், பொதுப்பணித்துறையின் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவீன உலகில் எல்லாத் துறைகளிலும், புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, முன்னேற்றப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனையொட்டி நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, கட்டுமானங்களின் செலவு பெரிதும் குறைகிறது; கட்டடங்களுக்குக் கம்பீரமான தோற்றம் கிடைக்கிறது. அது, பொது மக்களை ஈர்க்கக் கூடிய அளவில் அழகுடன் மிளிர்கிறது என்றும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். “கட்டட மலர்” என்ற கட்டுமான பொறியியல் சம்பந்தமான காலாண்டு இதழ் பொதுப்பணித்துறை மூலம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலாண்டு இதழின் முதல் பிரதியை மாண்புமிகு அமைச்சர் வெளியிட்டு, “கட்டட மலர்“ காலாண்டு இதழில் உள்ள கட்டுரைகளின் சாராம்சம் குறித்து விரிவாக பேசினார்கள்.

கட்டுமான பணிகளில் தர மேலாண்மை; இந்திய தரச் சான்று குறிப்புகள், கட்டுமான பொருட்கள் சோதனைக்கான ஆய்வகங்கள், (அனைத்து கட்டுமான தளங்களிலும் அடிப்படை பரிசோதனை கூடங்கள் அமைத்தல், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கின் நடுவே தூண்கள் – ஆர்க்கிடெக்ட் கட்டட வடிவமைப்பு ஆகியவை குறித்து இக்கட்டுரைகள் விளக்குகின்றன. கட்டடங்களில் அமைக்கப்படும் சுகாதார வசதி; அடிப்படை வடிவமைப்புகள், நீர்க்கசிவு தடுக்கும் முறைகள், (பொது கட்டடங்களில் கழிவறை தண்ணீர் இணைப்புகள் நீர்க்கசிவு, எம்-சான்ட் கலவை தயார் செய்யும் போது பாஸ்ராக் போன்ற கெமிக்கல் பயன்படுத்தி உறுதியான பூச்சு மேற்கொள்ளுதல், பாரம்பரிய கட்டடத்தின் முக்கியத்துவம், பாரம்பரிய கட்டடங்களை புதுப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இக்கட்டுரைகள் தெளிவாக்குகிறது.

மின் பாதுகாப்பு முறைகள், சோலார் மின் வசதி அமைக்கும் முறைகள் மற்றும் பயன்பாடு குறித்தும், மின்கசிவால் விபத்துக்கள் – சேலம் அரசு மருத்துவமனை, திருவாரூர் அரசு மருத்துவமனை; சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மற்றும், செங்கல்பட்டு மருத்துவமனை லிப்ட் பழுது, இதுபோன்ற பழுதுகள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கைகள் குறித்தும் இந்த காலாண்டு இதழ் விவரிக்கிறது என்பதை தெரிவித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், “கட்டட மலர்“ காலாண்டு இதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்தார்கள்.

செய்யும் பணிகள் அனைத்தும் சிறப்பாக அமையட்டும். செம்மையாக செய்து முடித்து காட்டுவோம். காண்போர் அனைவரும் பாராட்டும் வண்ணம் செய்து முடிப்போம்.
உணர்வுடன், ஊக்கமுடன் செய்து காட்டுவோம். துறை புகழ் பெற அனைரும் ஒன்று படுவோம் என்று கூறி அமைச்சர் அவர்கள் உரையை நிறைவு செய்தார்கள்.

மேலும், கருத்தரங்கு தொடக்க விழாவிற்கு பின்னர் சமீர் பாபெட் மஹாராஷ்டிரம், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆர்.வேல்ராஜ், ஆரோ, புதுடெல்லி, எஸ்.ஜே.விஜய், மதன்குமார் அன்னம், மேகித் கபூர், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் கே.ஆயிரத்தரசு ராஜசேகர், அ.கார்த்திகேயன் ஆகியோர் மாலை 5.30 மணிவரை கருத்தரங்கில் உரையாற்ற உள்ளார்கள். இக்கருத்தரங்கில், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பி.சந்திரமோகன், இ.ஆ.ப., முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் கே.ஆயிரத்தரசு ராஜசேகர் மற்றும் மண்டல தலைமைப் பொறியாளர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

The post பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் கட்டடங்களில் உள்கட்டமைப்பின் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister A. Come ,Velu ,Chennai ,of ,Kalaivanar Arena ,Public Works Department ,Minister A. ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் மக்களின் நீண்ட நாள்...