×

வடகிழக்கு பருவமழையால் மார்லிமந்து அணையில் தண்ணீர் அளவு உயர்வு

ஊட்டி : கடந்த ஒரு வாரங்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மார்லிமந்து அணையில் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் பெய்யும். இச்சமயங்களில் கூடலூர், ஊட்டி மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். இதனால், இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் அளவு உயரும். குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அனைத்து அணைகள், குளங்கள், ஏரிகளில் தண்ணீர் அளவு உயர்ந்து காணப்படும்.

மேலும், குடிநீர் ஆதாரங்களிலும் தண்ணீர் அளவு உயர்ந்து காணப்படும். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. ஆனால், இம்முறை எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் அளவு குறைந்தே காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் பெய்து வந்தது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் ஓரிரு நாட்கள் கனமழை பெய்தது. இதனால், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் முக்கிய அணைகளில் ஒன்றான மார்லிமந்து அணையிலும் தண்ணீர் அளவு உயர்ந்து காணப்படுகிறது. அதே சமயம் மழையினால் அணை நீர் மாசடைந்து நிறம் மாறி காணப்படுகிறது. எனவே, இந்த அணையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்தம் செய்யப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post வடகிழக்கு பருவமழையால் மார்லிமந்து அணையில் தண்ணீர் அளவு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Marlimandu dam ,Ooty ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...