×

6 மாதங்களுக்கு பின் பெரணி இல்லம் திறப்பு-சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

ஊட்டி : தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி இல்லம் 6 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். குறிப்பாக, தாவரவியல் பூங்காவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் செடிகள், பெரணி செடிகள், கள்ளிச்செடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் ஆகியன வைக்கப்பட்டள்ளன.

பெரணி மற்றும் கள்ளிச்செடிகள் நூற்றாண்டு பழமை வாய்ந்த கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன. இவைகள், அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. தற்போது இவைகள் வலுவிழந்த நிலையில், மேற்கூரையில் உள்ள கண்ணாடிகள் அவ்வப்போது கிழே விழுகின்றன. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 6 மாதங்களுக்கு முன் தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி இல்லம் மற்றும் கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகைகள் மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், பழுதடைந்த கண்ணாடிகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது பெரணி இல்லம் மட்டும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு பின் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த பெரணி இல்லத்திற்குள் சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள பல வகையான பெரணி செடிகளை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதனை புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். எனினும், இந்த இரு கண்ணாடி மாளிகையையும் தோட்டக்கலைத்துறையினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post 6 மாதங்களுக்கு பின் பெரணி இல்லம் திறப்பு-சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி appeared first on Dinakaran.

Tags : Perani House ,Ooty ,Botanical Gardens ,
× RELATED பந்தலூர் பகுதியில் பலாக்காய் சீசன் களைக்கட்டுகிறது