×

இடிந்து விழுந்த வீடுகள் அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்

சாயல்குடி : சாயல்குடி அருகே முத்துராமலிங்கபுரம் காலனி கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக வீடு, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், செவல்பட்டி ஊராட்சி, முத்துராமலிங்கபுரம் தர்மம்புஞ்சை காலனி குடியிருப்பில் 30 வீடுகள் இருந்தன. 2002ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த காலனி வீடுகள் சேதமடைந்து விட்டதால் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்க வீடுகள் இன்றி மதுரை,தூத்துக்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர். தற்போது இருக்கும் சிலர் வீடு, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கிராமமக்கள் கூறும்போது, தர்மபுஞ்சை காலனியில் 2002ல் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் குடியிருப்புவாசிகளுக்கு 3 சென்ட் நிலம், அதற்கான பட்டா வழங்கப்பட்டது. சுமார் 30 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு 30 குடும்பங்கள் வசித்து வந்தோம். கட்டிட கூலி தொழில், சுமை தூக்கும் தொழில், துப்புறவு பணி, விவசாய காலத்தில் விவசாய கூலி வேலை மற்ற நாட்களில் 100 நாள் வேலை மட்டுமே தொழிலாக செய்து வருகிறோம்.

குடியிருப்பில் குடிநீர் வசதி, தெருவிளக்கு, கால்வாய், கழிப்பறை, சாலை வசதிகள் கிடையாது. பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு காணாமல் போய் விட்டது, இதனால் அருகிலிருக்கும் முத்துராமலிங்கப்புரத்திற்கும், 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் செவல்பட்டிக்கும் சென்று தள்ளுவண்டிகளில் குடம் வைத்து குடிதண்ணீர் எடுத்து வருகிறோம். வீட்டிற்கு குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் இரவு நேரத்தில் மின்சாதன பொருட்கள் பயன்படுத்த முடியவில்லை. மயானம் வசதி கூட கிடையாது. இதனால் இறப்பவர்களை விவசாய நிலங்களில் அடக்கம் செய்து வருகிறோம்.

இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வீடை காலி செய்து, பிழைப்பு தேடி வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். 21 வருடங்கள் ஆன நிலையில், போதிய மராமத்து இல்லாததால், காலனி வீடுகள் அனைத்தும் சேதமடைந்து இடிந்து வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து கிடக்கிறது. சேதமடைந்த சில வீடுகளில் தற்காலிகமாக தென்னை ஓலை கிடுகு, ஓடு வேய்ந்து குடியிருந்து வருகிறோம்.

இரவு நேரங்களில் வீடுகளுக்குள் தூங்குவதற்கு அஞ்சி, வெளியில் வீடு முற்றங்களில் குடும்பத்துடன் படுத்து உறங்குகிறோம். விஷஜந்துகள் தீண்டிவிடும் அச்சத்துடன் இருக்கிறோம். தற்போது மழைக்காலம் என்பதால் வீடுகளில் மழைநீர் ஒழுகுகிறது. கொசுக்கடி, மழையிலும் பனி பொழிவால் அவதிப்பட்டு வருகிறோம். எனவே புதிய குடியிருப்பு வீடுகள், குடிநீர், சாலை, உயர் அழுத்த மின்சார வசதி உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இடிந்து விழுந்த வீடுகள் அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,Muthuramalingapuram ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...