×

பொத்தகாலன்விளையில் கால்வாயை சீரமைக்க களமிறங்கிய கிராம மக்கள்

சாத்தான்குளம் : பொத்தகாலன்விளையில் சடையனேரி கால்வாயை கிராம மக்களே ஊர் மக்களிடம் பணம் பிரித்து சீரமைத்தனர். சாத்தான்குளம் ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கு நீராதார குளமாக வைரவம்தருவை – புத்தன்தருவை விளங்கி வருகிறது. இந்த குளங்களில் நீரிருப்பு இருந்தால் இப்பகுதியில் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தியாகும் நிலை உள்ளது.

இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழை இல்லாமல் இந்த குளத்துக்கு நீர்வரத்தும் குறைந்து போனது. இதனால் சடையனேரி கால்வாயில் வரும் தண்ணீரை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து இப்பகுதிக்கு பயனளிக்கும் வகையில் உள்ள சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விடவும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க நிர்வாகிகள், கடந்த வாரம் நங்கைமொழி பகுதியில் இருந்து புத்தன்தருவை பகுதிக்கு திரும்பும் சடையனேரி கால்வாய் நீர் வழிப்பாதையை சீரமைத்தனர்.

இந்நிலையில் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி பகுதியில் உள்ள பொத்தகாலன்விளையில் சடையனேரி கால்வாயை சாஸ்தாவிநல்லூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் லூர்துமணியின் முயற்சியில் ஊர் மக்களிடம் பணம் பிரித்து சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் இயன்ற பணத்தை அளித்துள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் பங்கேற்று பொத்தகாலன்விளையில் தூர்ந்து காணப்பட்ட செடி, குப்பைகள் மற்றும் முட்செடிகளை அகற்றினர்.

மேலும் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் குவியல்களையும் அகற்றி சீரமைத்தனர். இதில் வைரவம் தருவை குளம் செல்லும் பகுதியில் இருந்து முதலூர் புதூர் வரை சுமார் 4 கிமீ தூரம் சீரமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் தண்ணீர் வந்தால் விரைந்து வைரவம்தருவை குளத்தை சென்றடையும், என்றனர்.

இந்த பணியில் ஒருங்கிணைப்பாளர் லூர்துமணி தலைமையில் சாஸ்தாவிநல்லூர் விவசாயிகள் நலச்சங்க தலைவர் எட்வின் காமராஜ், வேதக்கண் அறக்கட்டளை நிறுவனர் ஜோசப் சேவியர், சங்க பொருளாளர் ரூபேஷ் குமார், பெண்கள் ஒருங்கிணைப்பாளர் ரூபி, சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், செல்வஜெகன், அலெக்ஸ், வெலிங்டன், சித்திரை, டோமினிக், சமூக ஆர்வலர் பாபு, இயற்கை விவசாயி செந்தில், அமல்ராஜ், ஊர் பொதுமக்கள் பிரகாஷ், வெலிட், பட்டு சிங், கட்டிட ஒப்பந்ததாரர் அருள்செல்வன், இன்பம், ஜான்சன், பேச்சி, யோகராஜ் வெங்கடேஷ் உள்பட பலர் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர் மக்கள் பங்களிப்பில் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post பொத்தகாலன்விளையில் கால்வாயை சீரமைக்க களமிறங்கிய கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Pothakalanvilai ,Chatankulam ,Satyaneri canal ,Satankulam Union ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.50 லட்சம்...