×

செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 22.35 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதேபோல், ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில், தற்போது 3,210 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்து 514 கன அடியாகவும், ஏரியிலிருந்து நீர் வெளியேற்றும் அளவு 105 கன அடியாகவும் உள்ளது. இதனிடையே தினமும் செம்பரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, தற்போது ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து முதற்கட்டமாக நேற்று காலை 10 மணிக்கு 200 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. கனமழை எச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்தாலும் சமாளிப்பதற்காக முன்கூட்டியே உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து நேற்று வினாடிக்கு 200 கனஅடியாக இருந்த உபரி நீர் திறப்பு இன்று 1,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. எனவே, கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Semperambakkam Lake ,Kanchipuram ,Crembarbakkam Lake ,Chennai ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...