×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பை 1,000 கனஅடியாக உயர்த்த முடிவு

பல்லாவரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பை 1,000 கனஅடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 22.29 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதேபோல், ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில், தற்போது 3,195 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்து 452 கன அடியாகவும், ஏரியிலிருந்து நீர் வெளியேற்றும் அளவு 163 கன அடியாகவும் உள்ளது. இதனிடையே தினமும் செம்பரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, தற்போது ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து முதற்கட்டமாக நேற்று காலை 10 மணிக்கு 200 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. எனவே, கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பை வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1,000 கன அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி அளவில் நீர்திறப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பை 1,000 கனஅடியாக உயர்த்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Lake Serrambakkam ,Ballavaram ,Srembarambakkam lake ,Chennai ,Semperambakkam Lake ,Dinakaran ,
× RELATED பல்லாவரம் எம்எல்ஏ மகன் வழக்கு: பெண் பதில்தர ஆணை