×

கலெக்டர் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால்

நாகப்பட்டினம்,நவ.29: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால் உலக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வமுடன் வருகின்றனர் என அமைச்சர் ரகுபதி பேசினார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் ஜனவரி மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மாவட்ட தொழில் மையம் சார்பில் நாகப்பட்டினத்தில் நேற்று மாவட்ட அளவில் முதலீட்டாளர்கள் பெருந்திரள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாரிக் எம்.சையது வரவேற்றார்.

டிஆர்ஓ பேபி தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் தொழில் நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த சான்றுகளை வழங்கினர். தாட்கோ தலைவர் மதிவாணன், எம்எல்ஏக்கள் முகம்மதுஷா நவாஸ், நாகை மாலி, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக மாற்றுவது என்ற குறிக்கோளுடன் முதல்வர் வரும் ஜனவரி மாதம்7,8 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தவுள்ளார்.

இதற்கு முன்னேற்பாடாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னேறி இருந்தது. தற்பொழுது பின்னோக்கி சென்று விட்டது. முதல்வர் ஆட்சி காலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தை மீண்டும் தொழில்வளர்ச்சி நிறைந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என எனக்கு முன்பு பேசியவர்கள் எடுத்து கூறினர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் கடல் சார் வளங்களை மையமாகக் கொண்ட மாவட்டமாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் நாகப்பட்டினம் மாவட்டம் தொழில்துறையில் வளர்ச்சி அடைய தொடங்கியுள்ளது.

எங்கள் முதல்வரின் சாதனைகளில் இதுவும் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள், தொழில் முனைவோருக்கு தரும் ஆதரவு, சலுகைகள், மானியங்கள் இவற்றை எல்லாம் பார்த்து ரூ.328 கோடி தொழில் முதலீட்டிற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி ரூ.339 கோடியே 69 லட்சத்திற்கு தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு செய்துள்ளது. இந்த முதலீடுகளால் 3 ஆயிரத்து 168 நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் செய்ய ஆர்வமுடன் வருகின்றனர். இதற்கு காரணம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வது தான் காரணம். இங்கு ஜாதி கலவரம் இல்லை. துப்பாக்கி சூடு இல்லை. நிலம் கையகப்படுத்துவதில் முதலீட்டாளர்களுக்கு போதுமான உதவிகளை அரசு செய்து தருகிறது. குடிநீர், மின்சாரம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருகிறது.

அதே நேரத்தில் வங்கியில் இருந்து கடன் பெறுவதும் எளிதாக அமைகிறது. நிலம் கையகப்படுத்தும் அதே நேரத்தில் வேளாண்மையை சார்ந்த தொழில்களுக்கும் முதல்வர் பாதுகாப்பு தருகிறார். தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் தொழில் தொடங்க அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் இன்றி கோவை, திருப்பூர், திருச்சி, நாகப்பட்டினம் என எல்லா மாவட்டங்களிலும் தொழில் வளம் பெருக வேண்டும். இதனால் அந்த அந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் முதல்வர் திட்டங்களை தீட்டி வருகிறார். முதல்வரின் கனவு நினைவாகும் வகையில் தொழில் முதலீட்டாளர்கள் மட்டும் இன்றி அனைந்து அரசு துறை சார்ந்த அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், சிறு குறு தொழில்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், தஞ்சாவூர் சிட்கோ கிளை மேலாளர் ஆனந்த், நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குநர் மதிமாறன் மற்றும் பலர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் சரவணன் நன்றி கூறினார்.

The post கலெக்டர் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால் appeared first on Dinakaran.

Tags : Collector ,Tamil Nadu ,Nagapattinam ,India ,Dinakaran ,
× RELATED மின் கட்டணத்தை திரும்பபேற வலியுறுத்தல்