×

வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பதில் சிக்கல்

பாப்பிரெட்டிப்பட்டி: ஏற்காட்டில் போதிய மழை பெய்யாததால், வாணியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் 35.42 அடியாக உள்ளது. இதனால் நடப்பாண்டு, பொங்கல் சமயத்தில் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள முள்ளிக்காடு, சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வாணியாறு அணை 65 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 17 கிராமங்களில் உள்ள 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது.

மேலும், சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு வாணியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான ஏற்காடு மலையில் பெய்த தொடர் மழையால், அணை நிரம்பியது. இதையடுத்து பழைய ஆயக்கட்டு கால்வாயில், பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்தாண்டு இதுவரை போதிய மழை பெய்யவில்லை. மேலும், அணையில் போதிய அளவில் தண்ணீர் இருப்பும் இல்லை. நேற்று மாலை நிலவரப்படி, வாணியாறு அணையில் 35.42 அடிக்கு தண்ணீர் உள்ளது. போதிய தண்ணீர் இல்லாததால், அணையின் மூலம் விவசாயம் செய்ய காத்துக்கொண்டிருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வாணியாறு அணை பாசன விவசாயிகள் ஆலாபுரம், மருக்காலம்பட்டியை சேர்ந்த குமரவேல், கணேசன் ஆகியோர் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஏற்காட்டில் தொடர் மழை பெய்ததால், வாணியாறு அணை நிரம்பி, பழைய ஆயக்கட்டு கால்வாய் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் மோளையானூர், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை ஆகிய ஏரிகள் நிரம்பியதுடன், உபரிநீர் ஆற்றில் வெளியேறியது. இதன் மூலம், அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் சென்றது. ஆனால், இந்தாண்டு போதிய மழை இல்லாததால் அணை நீர்மட்டம் குறைவாக உள்ளது. வழக்கமாக பொங்கல் சமயத்தில் தண்ணீர் இருப்பை பொறுத்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு கால்வாயில் தண்ணீர் திறப்பிற்கான வாய்ப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இது தவிர முக்கிய ஏரிகளிலும் தண்ணீர் குறைவாக உள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில்

நீர்மட்டம் வேகமாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து, வாணியாறு அணை நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே, பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இவ்வாண்டு வாணியாறு பாசன பகுதிகளில், விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறப்பதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Vaniyaru dam ,Yercaud ,Dinakaran ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி