×

தமிழக கடலோர மறுசீரமைப்பு திட்டம் விரைவில் தொடக்கம்: உலக வங்கி உதவியுடன் ₹2000 கோடி நிதி

சிறப்பு செய்தி
தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை நீடித்த மற்றும் சமநிலையான பயன்பாடு மூலமாக காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளிலிருந்து மீட்டு, சிறந்த சமூகத்தை உருவாக்குவதே தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமாக விளங்கி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனே சுற்றுச்சூழல் துறையின் பெயரை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என மாற்றம் செய்து ‘‘காலநிலை மாற்றத்தை இந்த மானுடம் சந்திக்கும் பெரும் சவாலாக நான் பார்க்கிறேன்’’ என கூறியது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. அதன்படி, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு காலநிலை இயக்கம், தமிழ்நாடு சதுப்பு நில இயக்கங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, சதுப்பு நில தோட்டங்கள், பவள பாறைகளை வளமையோடு மீட்டெடுத்தல் போன்ற விஷயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறையின் இந்தாண்டுக்கான மானிய கோரிக்கையின் போது வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்கு, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும், கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வருங்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கடல் அரிப்பை தடுக்கவும், கடல் மாசுபாட்டை குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டம் ₹2000 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் (2024-29) அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை செயல்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:
தமிழக கடலோர மறுசீரமைப்பு திட்டம் என்பது முக்கியத்துவம் சிறப்பு வாய்ந்த திட்டங்களுள் ஒன்றாக பார்க்கப்படும். குறிப்பாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிகப்படியான கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த நெய்தல் மீட்சி இயக்க திட்டத்தின் மூலம் கடலோர மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ₹600 கோடி ஒதுக்கீடு செய்தும் மற்றவை உலக வங்கி உதவியுடனும் ஒட்டுமொத்தமாக ₹2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

அந்தவகையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் இப்பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, இம்மாதம் 30ம் தேதி துபாயில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் கட்சிகளின் மாநாட்டில் (COP28) தமிழகத்தின் சார்பாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் ஒன்றிய அமைச்சகத்தால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் விதமாக முன்னோடி திட்டங்களான மஞ்சள் பை திட்டம், சுற்றுச்சூழல் பெண்கள் வாரியம் திட்டம் மற்றும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள தமிழக கடலோர மறுசீரமைப்பு திட்டம் குறித்து பேச உள்ளனர்.

மாநாடு அடுத்த மாதம் 12ம் தேதி முடிவடைந்த பின் விரிவான திட்ட ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அதனை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளோம். அதன் பின்னர், தமிழக கடலோரங்களில் ஏற்படும் அரிப்புகளை தடுக்கவும், கடற்கரை மாசுப்படுத்தலை தடுக்கவும் விரிவான திட்டமிடலின்படி பணிகளை விரைந்து செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:
கடல் பல்லுயிர் பெருக்கம், கடலோர மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கடலோர அரிப்பை தடுக்கும் வகையில் தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளது மகிழ்ச்சி என்றாலும், மாங்குரோவ் காடுகளை கடந்த காலங்களில் பல்வேறு இயற்கை இடர்பாடுகள் வந்து அழித்துவிட்ட நிலையில் இன்றளவும் அதனை நடவு செய்யும் பணி பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல், பசுமையான சதுப்புநில காடுகள் இருப்பது அனைத்து வகையான இயற்கை பேரிடர்களுக்கும் எதிராக ஒரு பெரிய கவசமாக செயல்படும். இதுபோன்ற திட்டங்கள் மூலமாக தான் இந்த இடர்பாடுகளை தடுத்து இயற்கையை காக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

423 கி.மீ வரை கடலரிப்பு பாதிப்பு
இந்தியாவில் 8 ஆயிரம் கி.மீ தொலைவிற்கு கடற்கரை பகுதிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 14.2 சதவீதம் மக்கள் கடல்சார்ந்த தொழில்களை செய்து வாழ்ந்து வருகின்றனர். இதில் சமீபத்தில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 33 சதவீதம் கடல் அரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதிலும் தமிழகத்தை பொறுத்தவரை 991 கி.மீ தொலைவு கடற்கரை பகுதிகளில் 423 கி.மீ வரை கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

4வது இடம் தமிழ்நாடு
கடல் அரிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் மேற்குவங்கம் 60.5 சதவீதமும், இரண்டாவது இடத்தில் புதுச்சேரி 56.2 சதவீதமும், மூன்றாவது இடத்தில் கேரளா 46.4 சதவீதமும் மற்றும் 4வது இடத்தில் தமிழகம் 42.7 சதவீதமும் உள்ளன.

கடலரிப்பு ஏற்பட காரணம்
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர பகுதிகளில் சரக்கு மற்றும் மீன்பிடி துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், அனல் மின்நிலையங்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக கடலோரங்களில் இயற்கையாக மணல் இடம் பெயர்வதில் பாதிப்பு ஏற்பட்டு கடல் அரிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது.

1,802 ஹெக்டர் நிலத்தை இழந்த தமிழ்நாடு
கடைசியாக வெளியிடப்பட்ட இந்திய கடலோர கடற்கரையின் தேசிய மதிப்பீடு அறிக்கையில் கடந்த 1990 முதல் 2018 வரை ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு கடல் அரிப்பு காரணமாக 1,802 ஹெக்டேர் நிலத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

* தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகப்படியான கடல் அரிப்பு அச்சுறுத்தலை சந்திக்கும் மாவட்டங்கள் விழுப்புரம், திருவாரூர், கன்னியாகுமரியாகும். மேலும், காஞ்சிபுரத்தில் 84.41 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் 50 கி.மீ வரை அரிப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
* திருவொற்றியூர், பெரியகுப்பம், நடுக்குப்பம், ஒயாலிக்குப்பம், பொம்மியார்பாளையம், சின்னமுதலியார் சாவடி, பெரிய முதலியார் சாவடி, திருச்செந்தூர், கொளச்சல். புதுச்சேரியில் பெட்டோடை, பெரியகுப்பம் ஆகிய இடங்களில் கடல் அரிப்பு ஏற்படும் முக்கிய இடங்களாக (Hot Spot) உள்ளன.
* மணல் திட்டுகள் அதிகமாக குவிந்துள்ள இடங்களாக மெரினா கடற்கரை, எண்ணூர் துறைமுகம், கொசஸ்தலையாறு, வேதாரண்யம் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என கண்டறியப்பட்டுள்ளது.

நிபுணர்கள் கூறும் தீர்வு என்ன
* கடல் அரிப்பை தடுக்க கடினமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் (கடற்கரை பெருஞ்சுவர் கட்டுதல், கிரேயான்கள் அமைத்தல்)
* இயற்கை பேரிடர் காலங்களிலும் அதனை கடற்கரை தாங்கும் தன்மைக்கு பலப்படுத்த வேண்டும்.

The post தமிழக கடலோர மறுசீரமைப்பு திட்டம் விரைவில் தொடக்கம்: உலக வங்கி உதவியுடன் ₹2000 கோடி நிதி appeared first on Dinakaran.

Tags : World Bank Assistance ,Tamil Nadu ,World Bank ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...