×

8 பள்ளி செல்லா குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

சிவகங்கை, நவ.29: சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல், பள்ளிகளில் சேர்த்தல், சிறப்பு பயிற்சி மையங்கள் துவங்குதல், பயிற்சி முடித்து மீளப்பள்ளிகளில் சேர்த்தல், தொடக்கக்கல்வி முடிக்கும் வரை கண்காணித்தல் ஆகியவை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் பணிகளாகும். சிவகங்கை மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் செயல்படும் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க மாதம் இருமுறை கூட்டாய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவகோட்டை தாலுகா, இறகுசேரி, குடியிருப்புப் பகுதியில் 3பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள், காளையார்கோவிலில் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த 1 பள்ளி செல்லா குழந்தை, கல்லல் ஒன்றியம், செம்பனூர் குடியிருப்புப் பகுதியில் 4 பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

காளையார்கோவில் வாரச்சந்தையில் மீன் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மாவட்டம், நரிக்குடியைச் சேர்ந்த இரு வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டு சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைக்கப்பட்டனர். கல்லல் பகுதியில் ஒரு வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய டெக்ஸ்டைல்ஸ் கடை நிறுவனத்தின் உரிமையாளர் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post 8 பள்ளி செல்லா குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,District ,Collector ,Asha Ajith ,
× RELATED அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி வழங்கலாம்