×

நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்துறை ஆலோசனை

 

விருதுநகர், நவ.29: நெற்பயிரில் ஏற்படும் புகையான் நோயில் இருந்து தப்பிக்க வேளாண்துறை ஆலோசனை வழங்கி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாயப்பணிகள் துவங்கி உள்ளன. கோ 43, திருச்சி 1, ஏ.டி.பி 39 வகை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. தற்போதுள்ள காலகட்டத்தில் போதிய அளவு வெயில் இல்லாமல், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிரும் நிலவிவருகிறது. இதன் காரணமாக நெற்பயிரில் பூச்சிநோய் தாக்குதல் ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது.

இதிலிருந்து தப்பிக்கும் வழிமுறை குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது: நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் தழைச்சத்தை பிரித்து குறைத்து இட வேண்டும். வயலில் தேக்கிய நீர் வற்றிய பிறகு மீண்டும் பாய்ச்ச வேண்டும். தேங்கிய நீரை வடிப்பதாக இருந்தால் வேறொரு வயலுக்குச் செல்லாமல் வடிக்க வேண்டும். இந்நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 250 கிராம் அசிடேட் மருந்து தெளிக்க வேண்டும்.

இம்மருந்தினை மாலை நேரத்தில் தான் தெளிக்க வேண்டும். பயிரின் அடிப்பகுதியில் நன்கு படியும்படி இம்மருந்தைத் தெளிப்பது அவசியம். மருந்து தெளிக்கும் போது வயலில் தண்ணீர் தேங்கியிருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் கூடுதலான விபரங்களைப் பெற அருகே உள்ள வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு கூறினர்.

The post நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்துறை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED பயிற்சி பெறாத தொழிலாளர்களை கொண்டு...