×
Saravana Stores

அத்திவரதர் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோயிலில் சொக்கப்பனை: திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோயிலில் கார்த்திகை சொக்கப்பனை நிகழ்ச்சி நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை பவுர்ணமி நாளில் திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படும். இந்த, கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதனைத்தொடர்ந்து, மறுநாள் அனைத்து வைணவ கோயில்களிலும் பெருமாள் கார்த்திகை சொக்கப்பனை நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, மாலையில் இருந்த ஸ்ரீதேவி, பூதேவி – சமேத ஸ்ரீ தேவராஜ சுவாமி கண்ணாடி அறை அருகில் எழுந்தருளினார்.

பின்னர், ஸ்ரீதேவி, பூதேவி – சமேத ஸ்ரீ தேவராஜ சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கோயில் கொடிமரம் அருகே தேவராஜ சுவாமி எழுந்தருள 30 அடி உயரமுள்ள சொக்கப்பனை ஏற்றப்பட்டு, பட்டாசுகள் வெடித்து, பெருமாள் கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேவராஜ சுவாமியை தரிசித்தும், சொக்கப்பனை நிகழ்வையும் கண்டு ரசித்தனர். பின்னர், தேவராஜ சுவாமி 2 திருக்குடைகளுடன் கம்பீரமாக நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, வீடுகள் தோறும் பக்தர்கள் விளக்கேற்றி, பெருமாளை வணங்கி கார்த்திகை தரிசனம் செய்தனர்.

The post அத்திவரதர் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோயிலில் சொக்கப்பனை: திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Chokkappanai ,Varadaraja Perumal temple ,Kanchipuram ,Kanchipuram Athivaradhar ,Athivaradhar ,
× RELATED காஞ்சிபுரம் மாநகராட்சி 4வது வார்டில்...