×

மாமல்லபுரம் அருகே பனங்கிழங்கு அவிக்கும் இடமாக மாறிய பயணியர் நிழற்குடை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பனங்கிழங்கு அவிக்கும் இடமாக மாறிய பாழடைந்த பஸ் பயணியர் நிழற்குடையை இடித்து விட்டு, புதிய பயணியர் நிழற்குடை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் வடகடப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமம் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேருந்து பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடையை முன்பு இருந்த ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டதால், நிழற்குடை முழுவதும் விரிசல் ஏற்பட்டு, சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, மேற்கூரை முழுவதுமாக சேதமடைந்து இடிந்து விழும் அவல நிலையில் உள்ளது.

இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிழற்குடை பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளதால், இதை பகலில் பனங்கிழங்கு அவிக்கும் இடமாகவும், இரவு நேரங்களில் மதுப் பிரியர்களின் கூடாரமாகவும் மாறியுள்ளது. குடிமகன்கள் குடித்து விட்டு இரவில் அவ்வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்வதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பாழடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் பயன்பாட்டில் இல்லாத பேருந்து நிழற்குடையை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக ஒரு நிழற்குடை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் அருகே பனங்கிழங்கு அவிக்கும் இடமாக மாறிய பயணியர் நிழற்குடை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nizhalkudai ,Mamallapuram ,Panangijangu ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...