×

மாணவர்களின் மனதில் எளிதில் பதியும் வண்ணம் பள்ளி மதில் சுவற்றில் திருக்குறள்: தமிழ் அறிஞர்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாணவர்களின் மனதில் திருக்குறள் எளிதில் பதிய வகையில், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மதில் சுவற்றில் திருக்குறள் எழுத மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், முழுவதும் பல்வேறு கிராமங்கள், நகர பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு மேல்நிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், லட்சக்கணக்கான மாணவ – மாணவிகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போதைய, சூழலில் பாடப்புத்தகத்தில் உள்ள திருக்குறளை மாணவர்கள் படித்து வந்தாலும் போதிய அளவு மாணவர்களுக்கு திருக்குறள் பற்றிய முழுமையான கருத்தும், தெளிவும் இல்லை. செல்போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் வரும் தகவல்களை பற்றி மனப்பாடமாகவும், அர்த்தத்தையும் தெளிவாக தெரிந்து வைத்துள்ள இந்த காலத்து மாணவர்களுக்கு திருக்குறள் குறித்த ஆர்வமோ, அர்த்தமோ தெரியாமல் உள்ளனர் என தமிழ் அறிஞர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இந்த கால கட்டத்தில், பள்ளி மதில் சுவற்றில் வெறுமனேயும், வால் போஸ்டர்கள் ஒட்டும் இடமாகவும் மாறியுள்ளது. பள்ளி, பருவத்திலேயே மாணவர்களின் மனதில் தடம் பதிக்க அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றின் மதில் சுவர்கள், வகுப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றில் திருக்குறளை எழுதலாம். மாணவர்களின் கண்களில் படும்படி திருக்குறள் எழுதினால் சுலபமாக அவர்கள் மனதில் பதியும். மேலும், அத்துடன் காலை வழிபாட்டு நேரத்தில் சேர்த்து சொல்வதால் மாணவர்களின் மனதிலும் பதியும். இதற்கு, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளின் மதில் சுவற்றிலும் திருக்குறளை எழுத தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ் அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் அறிஞர்கள் கூறுகையில், ‘இன்றைய காலகட்டத்தில் திருக்குறளை தெரிந்து வைத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. காரணம், பாட புத்தகத்தில் மட்டுமே திருக்குறள் இடம் பெற்றுள்ளது. பள்ளி, மதில் சுவர்கள், வகுப்பறை கட்டிடங்கள், நிழற்குடைகள், அரசு அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை பெயர் பலகை, அரசு அலுவலர்களின் வாகனங்கள் ஆகியவற்றில் திருக்குறளை எழுதினால், மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. திருக்குறள் அடுத்த தலைமுறைக்கு சென்று சேரும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும்’ என்றனர்.

The post மாணவர்களின் மனதில் எளிதில் பதியும் வண்ணம் பள்ளி மதில் சுவற்றில் திருக்குறள்: தமிழ் அறிஞர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...