×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிள்ளையார் சஷ்டி விரதம் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிள்ளையார் சஷ்டி விரதம் தொடங்கப்பட்டுள்ளது. இந்து சமயத்தினை பொறுத்தவரை பல்வேறு தெய்வங்களுக்கு பக்தர்கள் பல்வேறு வகையில் விரதம் இருப்பர். சபரிமலைக்கு சபரிமலை யாத்திரை விரதம், சஷ்டி விரதம், புரட்டாசி விரதம், கௌரி நோன்பு விரதம் என பல்வேறு விரதங்களை கடைபிடித்து தங்களுக்கு வேண்டிய வரங்களை இதன்மூலம் பெறுவர். அவ்வகையில், தற்போது ஐயப்பன் விரதம் மற்றும் சஷ்டி விரதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிள்ளையார் சஷ்டி விரதம் கணபதி வழிப்பாட்டில் மிக முக்கியமான விரதமாகும். கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி திதி வரையுள்ள 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதமாகும். இவ்விரதத்தை பிள்ளையார் பெருங்கதை விரதம், விநாயகர் சஷ்டி விரதம் என பல பெயர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இது விநாயக விரதத்தில் மிகச் சிறப்பான விரதமாகும். இந்நாள் விநாயக பெருமாள் கயமுகாசூரனை சம்காரம் செய்த நாளாகும். அதனால் தான் விநாயகர் கோயிலில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விரத ஆரம்ப நாளில் விநாயகர் பிடித்து வைத்தே விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். களிமண் அல்லது மஞ்சள் ஆகியவற்றில் ஒன்றினால் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் வைத்து விநாயகரை வழிபட வேண்டும். யாஷினி தேவி என்ற தேவமங்கை விநாயகரை திருமணம் செய்ய விரும்பி தவம் இருந்தாள். ஆனால், அதற்கு சம்மதிக்காத விநாயகர் அவரை அருகம்புல்லாக மாறி தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இரு என்று வரமளித்தார் என்கிறது விநாயகர் புராணம். அருகம்புல் எவ்வளவு காலமானாலும் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது.

சிறிதளவு மழைநீர் பட்டவுடன் உடனே துளிர் விடும். அதுபோல், எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் சகிப்பு தன்மையோடும், நம்பிக்கையோடும் இருக்க வேண்டும் என விநாயகர் புராணம் கூறுகிறது. இந்த, 21 நாட்களும் மாலையில் விநாயகருக்கு பூஜை செய்து ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான நைவைத்தியம் நிவேதித்து வணங்க வேண்டும். முதல் 20 நாட்களில் ஒரு வேளை உணவு உண்டு, இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து பால், பழ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மரபு. விரதம் ஆரம்ப நாளில் 21 இழைகளை கொண்ட மஞ்சள் பூசிய நூளில் காப்பு அணிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், பிள்ளையார் சஷ்டி விரதத்தை நேற்று பக்தர்கள் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு பிள்ளையார் சஷ்டி வழிபாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் பழனிவேலன் கூறுகையில், இவ்விரதம் இருந்து விநாயகரை வழிபடுபவர்கள் சாபம், கடன், நோய்கள் நீங்க பெற்று வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கை வரப் பெற்று நலமோடு வாழ்வார்கள் என்பது உறுதி. இவ்விரத நாட்களில் வீடுகளில், கோயில்களிலும் பிருகு முனிவர் இயற்றிய விநாயகர் புராணம் காசியப முனிவர் அருளிய விநாயகர் கவசம், காரிய சித்திமாலை அவ்வையாரின் விநாயகர் அகவல் என்பனவற்றையும், ஆனைமுகக்கடவுள் போற்றி, ஆதிசங்கரர் இயற்றிய  கணேச பஞ்சரத்தினம் பாராயணம் செய்து வழிபட வேண்டும். மகாகவி பாரதி தந்த அகவல், நாடோடி இலக்கியங்கள் அருளிய விநாயகர் பஜனை கீர்த்தனம், ஆகிய பாராயணங்களையும் பாராயணம் செய்ய நல்வாழ்வை பெறுவது உறுதியாகிறது. ஆகவே பிள்ளையார் சஷ்டி விரதத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பிள்ளையார் கோயில்களில் பிள்ளையார் சஷ்டி விரதம் நடைபெறுகிறது’ என்றார்.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிள்ளையார் சஷ்டி விரதம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Pilliyar ,Kanchipuram ,Chengalpattu ,Pilliyar Shashti ,Pillayar ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது