×

தெருக்கூத்து, வில்லுப்பாட்டில் முதலிடம் பிடித்து மாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

ஸ்ரீபெரும்புதூர்: அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனோடு, கலை திறனையும் கண்டறியும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கலை திருவிழா போட்டிகள் நடத்தபட்டு வருகிறது. அதன்படி, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டிஉள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில், 9 மற்றும் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.

அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மாத்தூர் பள்ளி வழிகாட்டி ஆசிரியரான மாநில நல்லாசிரியர் யுவராணி தலைமையில், கலை திருவிழா போட்டிகளில் பங்கேற்றனர். அதன்படி, தெருக்கூத்து நாடகத்தில் 10 மாணவ, மாணவிகளும், வில்லுப்பாட்டில் 5 மாணவ, மாணவிகளும், வீதி நாடகத்தில் 10 மாணவ, மாணவிகளும், பொம்மலாட்டம் தனிநபர் போட்டியில் ஒரு மாணவரும் பங்கேற்றனர். இதில், தெருக்கூத்து நாடகம் மற்றும் வில்லுப்பாட்டிலும் மாநில அளவில், மாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர் யுவராணி, பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், ஊர் பொதுமக்கள், பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.

The post தெருக்கூத்து, வில்லுப்பாட்டில் முதலிடம் பிடித்து மாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Mathur Govt School ,Sriperumbudur ,Tamil Nadu School Education Department ,
× RELATED நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 29 வரை விண்ணப்பம்