×

கார்த்திகை தீபம் 3ம் நாளையொட்டி சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் கார்த்திகை தீபத்தின் 3ம்நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், தொடர்ச்சியாக 6 வாரங்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் சிறுவாபுரி கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளான நேற்று, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதனால், கோயிலில் பொது தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனத்திற்கும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதில், கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலுக்கு வந்த பக்தர்களால் கார் பார்க்கிங் முழுவதும் நிரம்பி வழிந்ததால், போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கோயில் கார் பார்க்கிங்கிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நகர முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post கார்த்திகை தீபம் 3ம் நாளையொட்டி சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Siruvapuri temple ,Karthikai Deepam ,Periyapalayam ,Siruvapuri Murugan Temple ,Karthika Deepam ,
× RELATED யுகாதி பண்டிகையை முன்னிட்டு...