×

ஆரம்ப துணை சுகாதார நிலையம் முன்பு மழைநீர் தேங்குவதால் நோயாளிகள் தவிப்பு

ஊத்துக்கோட்டை: தொளவேடு கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் முன்பு மழைநீர் தேங்குவதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே, மழைநீர் தேங்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ, கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை பெற வேண்டும் என்றாலோ பெரியபாளையம், ஏனம்பாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், தொளவேடு கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதை தொடர்ந்து, தொளவேடு கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையின்படி, ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தொளவேடு கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இங்கு அப்பகுதி மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆரம்ப துணை சுகாதார நிலையம் முன்பு மழைநீர் தேங்குவதால் நோயாளிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Uthukkottai ,Tholavedu village ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...