×

கலை திருவிழா கொண்டாட்டம் அரசு பள்ளி மாணவன் மாநில அளவில் முதலிடம்

பள்ளிப்பட்டு: மாநில அளவில் கலை திருவிழாவில் முதலிடம் பெற்றஅரசு பள்ளி மாணவனை ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் தனித் திறமையை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் ஆண்டு தோறும் கலைத் திருவிழா நடைபெற்று வருகின்றது. பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் நடைபெற்று சமீபத்தில் மாநில அளவில் திருச்சியில் கலைத் திருவிழா நடந்தது. இதில், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே வங்கனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் டேனியேல் என்ற மாணவன் ஆர்மோனியம் வாசிப்பில் மாநில அளவில் முதலிடம், டிரம்ஸ் வாசிப்பில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த மாணவனை பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வெகுவாக பாராட்டி நினைவு பரிசு நேற்று வழங்கினர்.

கிராமபுற பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவன் டேனியேல் கூறுகையில், தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றி வரும் எனது தந்தை ஜெபக்குமாரின் ஊக்கத்தால், எனக்கு 8 வயது முதல் இசை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆர்மோனியம், டிரம்ஸ், கீ போர்ட் இசை பயிற்சியில் ஆர்வம் உள்ளது. தமிழ்நாடு அரசு கலைத் திருவிழா மூலம் எனது இசை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத் திருவிழாவில் கீ போர்ட் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து முதலவர் மு.க.ஸ்டாலினிடம் சான்று மற்றும் விருது பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறேன். இசை பயணத்தில் எனது தந்தை, ஆசிரியர்கள், சக நண்பர்கள் ஊக்கம் பெரும் உதவியாக உள்ளது. எதிர்காலத்தில் சிறந்த இசை அமைப்பாளராக வர வேண்டும் என்பதே லட்சியம் என கூறினார்.

The post கலை திருவிழா கொண்டாட்டம் அரசு பள்ளி மாணவன் மாநில அளவில் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Art Festival ,Pallipatu ,
× RELATED கல்லுமலை கோயில் சித்திரை திருவிழா