×

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பல்லாவரம்: தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியிலிருந்து 200 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 21ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை காலத்தில், வருடத்தின் மொத்த மழைப் பொழிவில் 48 சதவீதம் தமிழகத்திற்கு கிடைக்கிறது. மேலும் கடந்த ஆண்டுகளை விட புயல்கள் உருவாக கூடும் எனவும், இந்தாண்டு இயல்பை விட 38 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையானது, சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தென்மேற்கு பருவமழையின் போதும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பிவருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் குடிநீர் ஆதாரங்களான நீர் நிலைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,134 பாசன ஏரிகளில் 1,441 பாசன ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக, 1,848 ஏரிகள் 75 விழுக்காடு கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. பாதி அளவில் 1,814 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 22.29 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதேபோல், ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில், தற்போது 3,195 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்து 452 கன அடியாகவும், ஏரியிலிருந்து நீர் வெளியேற்றும் அளவு 163 கன அடியாகவும் உள்ளது. இதனிடையே தினமும் செம்பரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, தற்போது ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து முதற்கட்டமாக நேற்று காலை 10 மணிக்கு 200 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.

எனவே, கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதேபோல், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், நேற்று முன்தினம் நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 281 கன அடி மழைநீர் வந்து கொண்டிருப்பதால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு, 2,788 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 18.89 அடியாகவும் இருக்கிறது.

பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 100 கன அடி மழை நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 1,886 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 30.62 அடியாகவும் உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 174 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே,சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 743 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 16.05 அடியாகவும் இருக்கிறது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 15 கன அடி மழைநீர் வருவதால், அந்த ஏரியின் நீர் இருப்பு 437 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 34.70 அடியாகவும் உள்ளது.

The post தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,Pallavaram ,Sembarambakkam lake ,Dinakaran ,
× RELATED துண்டு துண்டாக வெட்டி காவலாளி கொலை;...