×

கார்கில் போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் மாபெரும் வினாடி வினா போட்டி

சென்னை: கார்கில் வெற்றியின் 25வது ஆண்டை நினைவுகூரும் வகையில், நாட்டின் மிகப்பெரிய வினாடி வினா போட்டியான பேட்டல் ஆப் மைண்ட்ஸ் போட்டியை இந்திய ராணுவம் நடத்துகிறது. அக்டோபர் மாதம் முதல் 32,000 பள்ளிகள் இந்த போட்டிக்கு பதிவு செய்ததன் மூலம் இந்த நிகழ்வு தொடங்கியது. தேசத்தை கட்டமைப்பதில் இந்திய ராணுவத்தின் பங்கை எடுத்துரைப்பதும், இளம் அதிகாரிகள் பெறும் பயிற்சி மற்றும் ராணுவத்தின் பங்களிப்பு மற்றும் அதன் தியாகம் குறித்து இளம் மனங்களை வெளிப்படுத்துவதும் வினாடி வினா போட்டியின் நோக்கமாகும்.

இந்த போட்டி ஆரம்ப கட்டத்தில் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இந்திய ராணுவத்தின் தெற்கு கமாண்டன்ட் சார்பில் பெங்களூரு, புனே, ஐதராபாத் ஆகிய நகரங்களில் காலிறுதி போட்டிகள் நடைபெற்றன. தெற்கு கமாண்டன்ட் அரையிறுதிப் போட்டிகள் நேற்று சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் நடைபெற்றது. பெங்களூரு, விசாகப்பட்டினம், மும்பை, ராஜ்கோட், கோவா உள்ளிட்ட தென்பகுதியை சேர்ந்த 18 பள்ளிகள் அரையிறுதிப் போட்டியில் மோதின.

நல்கொண்டாவில் உள்ள தேஜா வித்யாலயா, விசாகப்பட்டினத்தின் டி பால் பள்ளி மற்றும் மும்பை நேவி சில்ட்ரன் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 3 அணிகள் 2023 டிசம்பர் 3ம் தேதி டெல்லியில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்திய ராணுவத்தின் தக்ஷின் பாரத் பகுதியின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் (ஜிஓசி) லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பங்கேற்பாளர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் பல முன்னாள் படைவீரர்களும், அரச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

The post கார்கில் போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் மாபெரும் வினாடி வினா போட்டி appeared first on Dinakaran.

Tags : Quiz Competition ,Kargil War ,Chennai ,Kargil ,Battle of Minds ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...