×

குமுளி அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சென்னை அச்சக அதிபரிடம் கேரள போலீசார் விசாரணை

சென்னை: குமுளி அருகே 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவத்தில், சென்னையை சேர்ந்த அச்சக உரிமையாளரிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக – கேரள எல்லையான குமுளி அருகே வண்டிப்பெரியாறில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், கடந்த மே மாதம் செலுத்தப்பட்ட ரூபாயில், இரு 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, வண்டிப்பெரியாறு பகுதியை சேர்ந்த சபின் ஜேக்கப் என்பவரிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்பிலான 44 ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அணைக்கரையை சேர்ந்த ராஜேஷ் என்பவர், சென்னையை சேர்ந்த ஒருவரை அறிமுகப்படுத்தியதும், அவரிடம் ரூ.20,000 நல்ல நோட்டுகளை கொடுத்து, ரூ.40 ஆயிரத்திற்கு கள்ள நோட்டுகளை பெற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சபின் ஜேக்கப் அவரது நண்பர்கள் ராஜேஷ், தனியார் பஸ் கண்டக்டர் சிஜூ பிலிப் உள்பட 7 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், இவர்களுக்கு கள்ளநோட்டு கொடுத்த சென்னை விருகம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த சுப்பிரமணியனை, தமிழக போலீசாரின் உதவியுடன் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். தொடர்ந்து, கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்த சம்பவத்தில், அந்த நோட்டுகளை அச்சடித்த அச்சக உரிமையாளரான சென்னை வடபழனியை சேர்ந்த கார்த்திகேயன் ராமதாஸை (41), கேரள போலீசார் தேடி வந்தனர். இவரை சில நாட்களுக்கு முன் தமிழக போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்து வரும் குமுளி இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார் தலைமையிலான போலீசார், கார்த்திகேயன் ராமதாஸை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

The post குமுளி அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சென்னை அச்சக அதிபரிடம் கேரள போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chennai ,Kumuli ,
× RELATED பெரியாறு புலிகள்...