×

ஆஸ்திரேலியாவுடன் 3வது டி20 இந்தியா 222 ரன் குவிப்பு

கவுகாத்தி: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டி20 போட்டியில், தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதத்தால் இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது. பரஸ்பாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன் எடுத்து பெஹரண்டார்ப் பந்துவீச்சில் கீப்பர் வேட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேற, இந்தியா 2.3 ஓவரில் 24 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், ருதுராஜ் – கேப்டன் சூரியகுமார் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தனர். சூரியகுமார் 39 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, திலக் வர்மா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய ருதுராஜ் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளி ஆஸி. பந்துவீச்சை சிதறடித்தார். 32 பந்தில் அரை சதம் அடித்த ருதுராஜ், 52 பந்தில் சத்தத்தை பூர்த்தி செய்து அசத்தினார். வேகப் பந்துவீச்சாளர்களை நம்பாமல், கடைசி ஓவரை வீச மேக்ஸ்வெல்லை அழைத்தார் மேத்யூ வேட்.

இதை நன்கு பயன்படுத்திக்கொண்ட ருதுராஜ் அந்த ஓவரில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களை பறக்கவிட… இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் 30 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. முதல் 10 ஓவரில் 80 ரன் எடுத்திருந்த இந்தியா, அடுத்த 10 ஓவரில் ருதுராஜின் ருத்ரதாண்டவத்தால் 142 ரன்களை சேர்த்து மிரட்டியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ரிச்சர்ட்சன், பெஹரண்டார்ப், ஆரோன் ஹார்டி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 223 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி இணைந்து துரத்தலை தொடங்கினர்.

The post ஆஸ்திரேலியாவுடன் 3வது டி20 இந்தியா 222 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Australia ,Guwahati ,Ruduraj Gaekwad ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது...