×

100 உலக சாதனைகள் செய்த சிறுமி!

நன்றி குங்குமம் தோழி

கண்ணை கட்டிக் கொண்டே எதிரில் இருக்கும் பொருட்கள் என்ன என்று சொல்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த பிரிஷா. இதுவரை இவர் 100 உலக சாதனைகளை செய்துள்ளார். இதில் பெரும்பாலானவை யோகாசனத்தில் செய்திருக்கிறார். இவரின் யோகா திறமையை பார்த்த மத்திய அரசு 2020 – 2021ல் தேசிய யூத் ஃபெஸ்டிவலில் நடைபெற்ற யோகா போட்டியில் நடுவராக அழைத்து கெளரவித்துள்ளது. இந்த சாதனைகள் எல்லாமே தனக்கு சாக்லெட் சாப்பிடுவது போல்தான் என சாதாரணமாக சொல்கிறார் பிரிஷா.

‘‘நான் இப்போது 9ம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு யோகாசனம் மேல் ஆர்வம் வரக்காரணம் என் பாட்டி. அவங்க வீட்டில் யோகாசனம் செய்வாங்க. அவங்கள பார்த்துதான் நானும் யோகாசனம் செய்ய கத்துக்கிட்டேன். என்னுடைய ஒரு வயசில் இருந்தே நான் யோகாசனம் கற்றுக் கொண்டு வருகிறேன். என் அம்மாவும் எனக்கு யோகாசனத்தின் மேல் இருந்த ஆர்வத்தை தெரிந்து கொண்டு, பலவிதமான யோகாசனங்களை கற்றுக் கொடுத்தாங்க. சின்ன வயசில் இருந்தே நான் செய்து வருவதால், என்னுடைய உடலும் எல்லாவிதமான யோகாசனங்கள் செய்ய பழகிக் கொண்டது. யோகா மட்டுமில்லாமல் நான் தியான பயிற்சியும் மேற்கொண்டு வந்தேன்.

இதனால் என் சிந்தனை திறன் மேலும் மேம்பட்டது. அது எனக்கு எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாகவும் நிதானமாகவும் கையாள உதவியது. நான் பல ஆசனங்கள் யோகாவில் கற்றுக் கொண்டதால், அதில் ஏதாவது சாதனை செய்ய விரும்பினேன். அம்மாவிடம் சொன்ன போது, அவங்களும் உடனே சரின்னு சொல்லிட்டாங்க. அப்படித்தான் என் ஏழு வயதில் உலக சாதனை ஒன்றை யோகாவில் செய்தேன்.

அதாவது உடலை நன்றாக வளைத்து இரண்டு கால்களுக்கிடையில் தலையை கொண்டு வர வேண்டும். இந்த ஆசனத்தை நான் ஒரு நிமிடத்தில் 16 முறை செய்தேன். அந்த வயதில் நான் செய்த இந்த ஆசனம் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றது. அதன் பிறகு யோகா செய்தால் இந்த அளவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்குமா என்றெல்லாம் பேசத் தொடங்கினர். இதனால் நான் என்னுடைய சாதனை மூலம் பலருக்கு யோகா கலை பற்றி தெரியவரும் என்று எண்ணி என்னுடைய சாதனைப் பட்டியலை தொடர்ந்தேன். என்னுடைய இந்த சாதனைக்கு அம்மா ரொம்பவே உறுதுணையா இருக்காங்க’’ என்ற பிரிஷாவின் அம்மா இவருக்காகவே யோகாசனம் கற்றுக் கொண்டுள்ளார்.

‘‘அம்மா வழக்கறிஞராக இருக்காங்க. அவங்க அடுத்து நீதிபதியாவதற்காக மேற்படிப்பு படிக்கிறாங்க. இதற்கிடையில் என் திறமையை கண்டு என்னை ஊக்கப்படுத்துவதற்காகவே அம்மா யோகா கற்றுக் கொள்ள ஆரம்பிச்சாங்க. அவங்கதான் எனக்கு பல யோகாசனங்களை கற்றுக் கொடுத்தாங்க. நான் செய்யும் ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. அவங்கதான் என் குரு. அவர் ஒவ்வொரு ஆசனங்கள் சொல்லிக் கொடுக்க அதைக் கொண்டு நான் யோகாசனத்தில் பல சாதனைகளை செய்யத் தொடங்கினேன். முக்கியமாக தண்ணீருக்கு அடியில் ஒரே காலை மடக்கி செய்யும் யோகாசனத்திலேயே 11 வகையான உலக சாதனைகளை செய்தேன்.

அதன் பிறகு தான் உலகளவில் அடையாளம் காணப்பட்டேன். குளோபல் பல்கலைக்கழகம் எனக்கு சான்றிதழ் வழங்கியது. மேலும் யோகாசன போட்டியில் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளேன். சர்வதேச யோகாசன போட்டியில் பல தங்கப் பதக்கங்கள் பெற்று உலக சாம்பியன் பட்டமும் பெற்று இருக்கிறேன்’’ என்றவர் இலவச யோகா பயிற்சியினை அளித்து வருகிறார்.

‘‘எங்களின் வீடு இருக்கும் பகுதியில் பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளி உள்ளது. அவர்களுக்கு யோகாவை கற்றுக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதன் அடிப்
படையில் இலவசமாக அவர்களுக்கு யோகா பயிற்சிகள் அளித்து வருகிறேன். என்னிடம் மூன்று வருடம் பயிற்சி பெற்ற ஆறாம் வகுப்பு மாணவர் யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார். யோகா மட்டுமில்லாமல் டென்னிஸ், பூப்பந்து, ஸ்கேட்டிங், கீபோர்டு, கித்தார், ரூபிக்ஸ் க்யூப், இசை, நடனம், ஓவியம் போன்றவற்றையும் பயின்று வருவது மட்டுமில்லாமல், அதற்கான போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கேன்.

நான் யோகாசனம் தொடர்ந்து செய்வதால், என்னால் படிப்பிலும் கவனம் செலுத்தி படிக்க முடிகிறது. அதற்கு உதாரணமாக மூன்று முனைவர் பட்டம் இளம் வயதில் பெற்றிருக்கிறேன். ‘‘யோகா இன்றே செய்வோம், இன்பம் பெறுவோம்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி இருக்கேன். தினமும் யோகாசனம் செய்வதால் எனக்கு கண்ணை கட்டிக் கொண்டே என் எதிரில் இருக்கும் பொருள் என்னவென்று சொல்ல முடியும்.

தியானத்தின் மூலம்தான் இதெல்லாம் சாத்தியமானது. எல்லோரும் யோகாசனம் செய்து நோய் இல்லாத வாழ்க்கையை வாழலாம்’’ என்று கூறும் பிரிஷா இளம் சாதனையாளர் விருது, லிட்டில் யோகா ஸ்டார் விருது, அன்னை தெரசா விருது, அப்துல்கலாம் விருது, பாரதி கண்ட புதுமைப்பெண் விருது, யோகா ராணி, யோககலா, யோக, ஆசனாஸ்ரீ, யோக ரத்னா, இளம் சாதனையாளர் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post 100 உலக சாதனைகள் செய்த சிறுமி! appeared first on Dinakaran.

Tags : Prisha ,Tirunelveli ,
× RELATED ஆட்டுச்சந்தைக்கு சென்று திரும்பிய ஆடு வியாபாரி பரிதாப சாவு