×

கரடி தாக்கியதில் ஊழியர் சாவு: உயிரியல் பூங்காவில் பரிதாபம்

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திராகாந்தி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் கரடி அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் பகல் நேரத்தில் சுற்றி வர திறந்தவெளி பகுதி உள்ளது. அதனை சுற்றி பார்வையாளர்கள் உள்ளே வராத வகையில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கரடி இரவு நேரத்தில் கூண்டுக்குள் செல்லும் விதமாக அமைக்கப்பட்டு இந்த கூண்டுக்கு 3 திசைகளில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரியியல் பூங்காவில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் நாகேஷ்(25). இவர் நேற்று கரடி உள்ள கூண்டின் அருகே தூய்மைபணியில் ஈடுபட்டார்.அப்போது கூண்டில் இருந்த கரடி திடீரென வெளியே வந்து, நாகேஷ் மீது பாய்ந்து கடித்து குதறியது. கரடியிடம் சிக்கிக்கொண்ட நாகேஷ் அதனுடன் கடுமையாக போராடினார். ஆனால் அதற்குள் கரடி அவரை பல இடங்களில் கடித்து காயப்படுத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து விலங்குகள் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஊழியர்கள் வந்து கரடியை விரட்டிச்சென்று கூண்டில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் உயிரியல் பூங்காவில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து உயிரியியல் பூங்கா காப்பாளர் நந்தினி கூறுகையில், கரடி இருக்கும் கூண்டின் கதவுகள் மூடப்படவில்லை. ஆனால் நாகேஷ், கூண்டின் கதவு மூடப்பட்டுள்ளதாக நினைத்து தூய்மைபணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் எதிர்பாராத நிலையில் கரடி அவரை தாக்கிக்கொன்றது மிகவும் வேதனையாக உள்ளது. அவரது குடும்பத்திற்கு வனத்துறை மூலம் ரூ.10 லட்சம் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

The post கரடி தாக்கியதில் ஊழியர் சாவு: உயிரியல் பூங்காவில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Indrakhandi Zoo ,Visakhapatnam, AP ,
× RELATED மோடியின் கட்டுப்பாட்டில் ஜெகன்மோகன்,...