×

திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறது ஒன்றிய அரசு: திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை: திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறது ஒன்றிய அரசு என திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக அமலாக்க துறை வழக்குப்பதிவு செய்து, பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன், ஆதார் அட்டை விவரங்களுடனும் ஆஜராகும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்மன்களை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்க துறை அனுப்பிய சம்மன்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூத்த வழக்கறிஞர் எம்.பி. என்.ஆர்.இளங்கோ; மணல் குவாரி விவகாரத்தில் போலி ஆதாரங்களை வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறது ஒன்றிய அரசு. அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாதது ஏன்? மணல் குவாரி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்க முடியும். தமிழ்நாடு அரசின் மீது அவப்பெயரை ஏற்படுத்தவே பாஜக செயல்படுகிறது என்று கூறினார்.

The post திமுக அரசு மீது களங்கம் விளைவிக்கவே அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறது ஒன்றிய அரசு: திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Enforcement Directorate ,DMK Government ,DMK ,NR Ilango ,Chennai ,Dinakaran ,
× RELATED டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு...