×

புதிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை

*கலெக்டர் நேரில் ஆய்வு

நாமக்கல் : நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், புறநோயாளிகளுக்கு சிகிச்சை தொடங்கியது. இதனை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி வளாகத்தில், நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கடந்த 21ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மருத்துவமனை 700 படுக்கை வசதிகளுடன் கூடிய தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது.

இதையொட்டி, நாமக்கல்-மோகனூர் ரோட்டில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு மருத்துவமனையில் இருந்த புற நோயாளிகள் பிரிவு, நேற்று (27ம் தேதி) முதல் புதிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், புறநோயாளிகளுக்கான சிகிச்சை நேற்று தொடங்கியது. இதனை கலெக்டர் உமா நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார்.

மருத்துவமனையில் உள்ள வசதிகள் விபரம் வருமாறு: தரை தளத்தில், மருத்துவ உபகரணக்கிடங்கு, மருந்து கிடங்கு, டயாலசிஸ், சிஎஸ்எஸ்டி, மத்திய ஆய்வகம், மருத்துவ பதிவேடு துறை, கதிரியக்கவியல் (சிடி- எம்.ஆர்ஐ), பிஎம்ஆர் புறநோயாளிகள் பிரிவு மற்றும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம் செயல்படுகிறது. முதல் தளத்தில், முடநீக்கியல் சிகிச்சை பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கண் மருத்துவம் புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சிகிச்சை அறுவை அரங்கம் ஆகியவை செயல்படுகிறது.

இரண்டாம் தளத்தில், குழந்தைகள், தோல் மருத்துவம், மனநலம், காசநோய், நெஞ்சக மருத்துவம், பல், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவ புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகள், மகப்பேறு அறுவை அரங்கம், ரத்த வங்கி மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு போன்றவை செயல்படுகிறது.

அதே போல், மூன்றாம் தளத்தில், 132 படுக்கைகள் பொது மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு, 20 படுக்கைகள் நெஞ்சக நோய் உள்நோயாளிகள் பிரிவு, 20 படுக்கை மனநல மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு, 10 படுக்கைகள் தோல் சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு, அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர இருதய சிகிச்சை பிரிவுடன் இயங்குகிறது. 4ம் தளத்தில், 24 படுக்கைகள் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவு, 105 படுக்கைகள் மகளிர் நல, பேறுகால மற்றும் மகப்பேறு உள்நோயாளிகள் பிரிவு மற்றும் 75 படுக்கைகள் குழந்தைகள் நல சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு ஆகியவை இடம் பெற்றுள்ளது.

ஐந்தாவது தளத்தில், 120 படுக்கைகள் பொது அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு, 75 படுக்கைகள் முடநீக்கியல் மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு மற்றும் 30 படுக்கைகள் கண் மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு ஆகியவை இடம் பெற்றுள்ளது.

6வது தளளத்தில், 9அறுவை அரங்கங்கள், மயக்கவியல் துறை, அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு, பிந்தைய மயக்க மருந்து தீவிர சிகிச்சை பிரிவு, 30 படுக்கைகள் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு உள்நோயாளிகள் பிரிவு மற்றும் 20 படுக்கைகள் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பரிவு ஆகியவை இயங்குகிறது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் நாள் ஒன்றுக்கு 14 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

The post புதிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Nomakal ,Namakkal Government Medical College Hospital ,Uma ,Dinakaran ,
× RELATED ஓவியங்களாக கண்களை கவரும் பவளப்பாறைகள்!