×

திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் விபரீதம் தந்தை, மகள் உள்பட 5 பேர் ஆற்று வெள்ளத்தில் சிக்கினர்

*கயிறு கட்டி மீட்ட இளைஞர்கள்

* பெரியகுளம் அருகே பரபரப்பு

பெரியகுளம் : பெரியகுளம் அருகே, ஆற்று வெள்ளத்தில் சிக்கித்தவித்த தந்தை, மகள் உள்பட 5 பேரை, அப்பகுதி இளைஞர்கள் கயிறு கட்டி மீட்டனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவை சேர்ந்த சின்னூர், பெரியூர் மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்து மக்கள் பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாக பெரியகுளம் வந்து ரேஷன் பொருள் உள்ளிட்டவை வாங்கி செல்வது வழக்கம். இந்த மலை கிராம மக்கள் சின்னூர் மற்றும் பெரியூரில் இருந்து 9 கி.மீ தூரம் மலைச்சாலை வழியாக பெரியகுளம் சோத்துப்பாறை அணை வரை நடந்து வந்து, அங்கிருந்து பெரியகுளத்திற்கு ஆட்டோ மற்றும் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

அவ்வாறு மலைச்சாலை வழியாக சின்னூர் நகர மக்கள் நடந்து வரும் பொழுது குறுக்கிடும் கல்லாற்றை கடந்து வர வேண்டியதாக உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மழைப் பொழிவு இல்லாதிருந்த நிலையில், கல்லாற்றில் வெள்ளம் சற்று குறைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து சின்னூர் மலை கிராம மக்கள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆற்றினை கடந்து சென்று வந்தனர்.

சின்னூர் மலை கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்காக ராமன் என்பவர் தனது மகள் அம்பிகா மற்றும் பேரன்கள் குமரன், ரித்திக், தினேஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் கல்லாற்றை கடந்தபோது திடீரென்று ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. செய்வதறியாது திகைத்த ராமன், அவரது மகள் மற்றும் குழந்தைகள் ஆற்றின் நடுவே இருந்த பாறைகளில் தஞ்சம் அடைந்தனர்.

வெள்ளம் குறையாததால் சுமார் இரண்டு மணிநேரம் வரை ஆற்றைக் கடக்க முடியாமல் அவர்கள் பரிதவித்தனர். அந்த வழியாக வந்த இளைஞர்கள் சிலர் இவர்களின் நிலை அறிந்து உடனடியாக கயிறு கட்டி 5 பேரையும் பாதுகாப்பாக மீட்டு மறுகரைக்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் விபரீதம் தந்தை, மகள் உள்பட 5 பேர் ஆற்று வெள்ளத்தில் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Periyakulam Periyakulam ,Periyakulam ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு