×

ஐஐடி பேராசிரியர் துன்புறுத்தலால் ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை என விசாரணை குழு அறிக்கை : சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் அதிரடி!!

சென்னை : சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் சச்சின் குமார் கடந்த 31-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானது.

இதில், மாணவரின் வழிகாட்டிப் பேராசிரியருக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி, ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவைச் சென்னை ஐஐடி அமைத்தது. அந்தக் குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.சபிதா, ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கீத்து உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

இந்தக் குழு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பல்வேறு கருத்துகளைப் பெற்றது. பல்வேறு கட்ட விசாரணைகளின் அடிப்படையில், 700 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை திலகவதி தலைமையிலான குழுவினர் ஐஐடி இயக்குநர் வீ.காமகோடியிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சமர்ப்பித்தனர். இந்த நிலையில், ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் மீது நடவடிக்கை எடுக்க ஐவர் குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவர்களிடையே நடத்திய விசாரணையில், தற்கொலை செய்த சச்சின் மட்டுமின்றி மேலும் பல ஐஐடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது.

The post ஐஐடி பேராசிரியர் துன்புறுத்தலால் ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை என விசாரணை குழு அறிக்கை : சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் அதிரடி!! appeared first on Dinakaran.

Tags : Sachin Kumar ,IIT ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கும்...