×

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 16,816 பேர் விண்ணப்பம்

தர்மபுரி, நவ.28: தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில், 16,816 பேர் விண்ணப்பித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) என 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 27,302 வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2024 ஐ தகுதியேற்பு நாளாக கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு முறையிலான வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்கு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த மாதம் 27ம்தேதி, வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சாந்தி வெளியிட்டார். வரைவு வாக்காளர் பட்டியல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வரும் 9ம்தேதி வரை மக்கள் பார்வைக்காக வைத்திருக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வரும் 1.1.2024ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்தும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள தர்மபுரி மாவட்டத்தில் 1,489 வாக்குச்சாவடி நிலையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. கடந்த 4, 5 மற்றும் 25, 26ம்தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடந்தது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தா லுகா அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்களிலும் படிவங்கள் பூர்த்தி செய்து வழங்கலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை படிவங்கள் பெறப்படுகிறது. கடந்த மாதம் 27ம்தேதி முதல், நடப்பு மாதம் 26ம்தேதி வரை நடந்த சிறப்பு முகாம்கள் மற்றும் வாக்குச்சாவடி மையம், தாலுகா அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்களில் மொத்தம் 16 ஆயிரத்து 816 பேர் படிவங்கள் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் தங்கள் பெயர்களை சேர்த்துள்ளனர். படிவம்-6 ஐ 12,695 பேர் பூர்த்தி செய்து சேர்க்கைக்காக வழங்கியுள்ளனர். படிவம் -7 ஐ பூர்த்தி செய்து 2,153 பேரும், படிவம் -8ஐ பூர்த்தி செய்து 1,968 பேரும் வழங்கியுள்ளனர். ஒட்டு மொத்தமாக 16,816 பேர் படிவங்களை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் அக்டோபர் 27ம்தேதி முதல், கடந்த 26ம்தேதி வரை நடந்த வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியல் அரசு அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4, 5 மற்றும் 25, 26ம்தேதி ஆகிய 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில், மொத்தம் 16,816 பேர் படிவம் வழங்கியுள்ளனர். வரும் 9ம்தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’ என்றனர்.

The post வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 16,816 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி