×

சென்னையில் வெறிநாய்க்கடியை முற்றிலும் தடுக்க தினசரி 910 தடுப்பூசி செலுத்த திட்டம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் வெறிநாய்க்கடியை முற்றிலும் தடுக்கும் வகையில், தினசரி 910 தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு இருப்பதாக, மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டன. இவற்றில் பல திடீரென மக்களை விரட்டி கடிப்பதால், முன்பு போல பொதுமக்கள் நிம்மதியாக தெருவில் நடமாட முடியாத நிலை உள்ளது.

ரேபிஸ் கிருமியினால் பாதிக்கப்பட்ட வெறிபிடித்த நாய்களால் மட்டுமே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், அது போன்ற நாய்களை கண்டால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து தனியாக கூண்டில் அடைத்து விடுவார்கள். தினமும் அந்த நாய்களுக்கு உணவு வழங்குவார்கள். இயற்கையான மரணம் நிகழும் வரை குறிப்பிட்ட வெறி நாய்களுக்கு தினமும் உணவு அளித்து அதனை பராமரித்து வருவது மாநகராட்சி ஊழியர்களின் வேலையாக உள்ளது. வெறி பிடித்த நாய்கள் மனிதர்களை கடிக்கும் போது அவற்றை எளிதாக கண்டறிந்து மாநகராட்சிக்கு தெரிவித்து, அதனை பொதுமக்கள் பிடித்து கொடுத்து விடுகின்றனர்.

ஆனால் சாலையில் செல்லும்போது ஒருவரை நாய் கடித்துவிட்டால் அவர் அடுத்த நிமிடம் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டு அதன் பிறகு குறிப்பிட்ட அந்த நாயை பற்றி யோசிப்பார். மீண்டும் திரும்பி அங்கு சென்று பார்த்தால் அந்த நாய் இருக்குமா, இல்லையா என தெரியாது. அந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உள்ளதா என்பதும் தெரியாது.

தற்போது பெரும்பாலான சாலைகளில் இந்த நிலை தொடர்ந்து வருகிறது. காலையில் வாக்கிங் செல்பவர்கள் முதல் இரவு தாமதமாக வீட்டிற்கு செல்பவர்கள் வரை தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட தெருக்களில் நாய் அதிகம் இருப்பதால் அந்த தெரு வழியாக செல்லாமல் வேறு தெருவின் வழியாக செல்பவர்களும் உள்ளனர்.சென்னையில் சமீபத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவை பொதுமக்களுக்கு தொல்லை தருவதாகவும் தினமும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரமாக சென்னையை உருவாக்கவும், சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை கால்நடை மருத்துவப்பிரிவு சார்பில் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணியை நீக்க அதற்கான மருந்து செலுத்தும் திட்டத்தினை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் படி, வெறிநாய்க்கடி நோயினை முற்றிலும் தடுப்பதற்கு அதற்கான தடுப்பூசியினை அனைத்து நாய்களுக்கும் செலுத்த வேண்டும் என்ற பரிந்துரையின் கீழ் நடத்தப்படவுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி சென்னை மாநகராட்சியில் மொத்தம் 57,366 தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டது. 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் திட்டத்தின் கீழ், 68,577 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தெரு நாய்களுக்கும் பொது மக்களுக்கும் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு உறுதியளிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை மருத்துவர், 4 நாய் பிடிக்கும் பணியாளர்கள், உதவியாளர்கள் 2 பேர், ஒரு வாடகை வாகனம் மற்றும் ஓட்டுனர் தேவைப்படுகின்றனர். இத்திட்டத்தில் தெரு நாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்கு சென்று நாய் பிடிக்கும் பணியாளர்கள் வலைகளை கொண்டு பிடித்து, பின்னர் கால்நடை மருத்துவரால் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தியவுடன் வண்ண சாயம் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு அவை அதே இடத்திலேயே விடுவிக்கப்படும்.

மேலும், நாய்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 10% உயர்ந்து இருக்க வாய்ப்புள்ளது என்ற நிலையில் 3 வருடத்திற்கு 30% உயர்ந்திருக்கும் பட்சத்தில், தற்போது 93,000 எண்ணிக்கையிலான தெருநாய்கள் இருக்கலாம், என உத்தேசிக்கப்பட்டு அதற்கேற்றவாறு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு குழுவும் தோராயமாக நாள் ஒன்றிற்கு சுமார் 130 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதாக கணக்கிடப்பட்டு 7 குழுக்களும் சேர்ந்து தினசரி தோராயமாக 910 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது, என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

8000 தெரு நாய்களுக்கு கருத்தடை

சென்னை மாநகராட்சியில் இதுவரை 8000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கால்நடை பாதுகாப்பு ஆர்வலர்கள் சிலர், தெரு ஓரங்களில் நாய்களுக்கு உணவை அளித்துவிட்டு பெரும் நன்மை செய்துவிட்டதாக கருதி சென்று விடுகின்றனர். உண்மையாகவே கால்நடை ஆர்வலர்களாக இருந்தால் நாய்களைத் தத்து எடுத்து வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவற்றை பராமரித்து நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்க விரும்புபவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இங்கு உள்ளவர்கள் அப்படி செய்வதில்லை. வாகன ஓட்டிகள் நாய்கள் துரத்தும் போது பதற்றப்படாமல் இருக்க வேண்டும். விரைவில் நாய்கள் விவகாரத்தில் முடிந்தவரை மாநகராட்சி தங்களது கடமையை
செய்யும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்ட விதிகளில் திருத்தம் தேவை
தெருநாய்களின் தொல்லை குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘தெரு நாய்களை கொல்லக்கூடாது கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சட்ட சிக்கலால் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. தெருநாய் பிரச்சனையில் முழுமையான தீர்வு காண வேண்டும் என்றால் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். அதேபோல பிறந்து 7 மாதம் முதல் ஒரு வருடம் வரை நாயை கருத்தடை செய்யக்கூடாது எனவும் சட்ட விதிகள் கூறுகின்றன. இவ்வாறு கருத்தடை செய்து விடப்படும் தெரு நாய்களால் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றெல்லாம் கூற முடியாது. தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் கடித்தாலும் மக்கள் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுதான் ஆக வேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வாக, சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.

The post சென்னையில் வெறிநாய்க்கடியை முற்றிலும் தடுக்க தினசரி 910 தடுப்பூசி செலுத்த திட்டம்: மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...