×

பழவேற்காடு முகதுவாரத்தில் விரைவில் தடுப்புசுவர் பணி: தேசிய வனவிலங்கு வாரியம் அனுமதி

சென்னை: பழவேற்காடு ஏரி முகதுவாரத்தில் கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்க தேசிய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்துள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. பழவேற்காடு கடலும், ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக, மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடல்நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் என 6 மணி நேரத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பயணிக்கிறது. கடல் சீற்றம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் மணல் திட்டுக்கள் உருவாகி முகத்துவாரம் அடைந்து விடுகிறது.

இதனால், கடல்நீர் ஏரிக்கும் ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைபட்டதோடு ஏரியின் ஆழம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை துார்வாரி, அலைதடுப்பு சுவர்கள் அமைக்கும் வேண்டும் என பல ஆண்டுகளாக மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி, அலைதடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிக்கு, தமிழக அரசு ₹26.8 கோடி ஒதுக்கியது. 2020ல் நிர்வாக ஒப்புதலும் தரப்பட்டது.

மேலும் இதற்கான கான்கிரீட் தடுப்புச்சுவர், வடக்கு பகுதியில், 160 மீ., நீளம், தெற்கு பகுதியில் 150 மீ., நீளம் மற்றும், 4.5 மீ., உயரத்தில் அமைக்க திட்டமிட்டது. ஆனால் ஒன்றிய வனவிலங்கு துறை அனுமதி கொடுக்காததால் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் மீனவர்கள் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் கடந்த 17ம் தேதி நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முகத்துவாரத்தின் இருபுறமும் தலா 160 மீட்டர் மற்றும் 150 மீட்டர் என 2 சுவர்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக விரைவில் பழவேற்காடு முகத்துவார சுவர் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில், ‘‘இங்கு மீன்பிடி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. இந்த திட்டம் செயல்படாத காரணத்தால் மக்கள் வேறு வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மற்ற தொழில்களில் தேர்ச்சி பெறாததால், அவர்கள் சிறிய வேலைகளை மட்டுமே பெறுகிறார்கள் மற்றும் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post பழவேற்காடு முகதுவாரத்தில் விரைவில் தடுப்புசுவர் பணி: தேசிய வனவிலங்கு வாரியம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Palavekadu estuary ,National Wildlife Board ,Chennai ,Palavekadu lake ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...