×

மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பசுமை சாம்பியன் விருது: இந்திய பசுமை கட்டிட கவுன்சில் வழங்கியது

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்திய பசுமை கட்டிட கவுன்சில் (ஐ.ஜி.பி.சி) வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான பசுமை சாம்பியன் விருதை பெற்றுள்ளது. பசுமை கட்டுமான கவுன்சில் சார்பில், சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 24ம் தேதி நடந்த விழாவில், இந்தியாவில் பசுமை வெகுஜன விரைவு போக்குவரத்து அமைப்பு (எம்.ஆர்.டி.எஸ்) இயக்கத்தை முன்னெடுத்து வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி, பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் அர்ச்சுனன் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனது அனைத்து நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததற்காக சமீபத்தில் 2 சிறப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த நவம்பர் 20ம் தேதி லண்டனில் நடந்த விழாவில் பசுமை கட்டுமான அமைப்பிலிருந்து 2023ம் ஆண்டிற்கான “கிரீன் ஆப்பிள்” விருது தரவரிசையில் தங்கம் வென்றுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 24ம் தேதி அமெரிக்காவின் மியாமியில் நடந்த விழாவில் பசுமை அமைப்பிலிருந்து 2023ம் ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கான பசுமை உலக விருதில் வெள்ளி வென்றது. காற்றின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாத்தல், சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தி கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான பணியை அங்கீகரிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் முன்னணியில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிலையை இந்த விருதுகள் எடுத்துக்காட்டுகின்றன. நிறுவன அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்கள், பங்குதாரர்களுக்கும் தரம் மற்றும் நிலையான வளர்ச்சியில் சிறந்து விளங்க தொடர்ந்து பாடுபடுவதற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது, என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பசுமை சாம்பியன் விருது: இந்திய பசுமை கட்டிட கவுன்சில் வழங்கியது appeared first on Dinakaran.

Tags : Metro Rail Company ,Green Building Council of India ,Chennai ,Chennai Metro Rail Company ,IBC ,Green ,
× RELATED புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு...