×

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 14வது இதய மாற்று அறுவை சிகிச்சை: ஒரே வாரத்தில் வீடு திரும்பிய நோயாளி

சென்னை: மனித உடலில் இதயம் மிகவும் முக்கியமான ஒன்று. அதன் செயல்பாட்டை பொருத்தே மற்ற உறுப்புகள் செயல்படும். இதய செயலிழப்பு காரணமாக, உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்கள் மோசமான நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இந்தியாவிலும் இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள காலக்கட்டத்தில் 30 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு இதய செயலிழப்பு அதிகளவில் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் மோசமான உணவு தேர்வுகள், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் அதிகரித்து வரும் மன அழுத்தம் ஆகியவை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கிராமப்புற மக்களை காட்டிலும் இதய செயலிழப்பு என்பது நகரங்களில் வாழும் மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இதய செயலிழப்பு ஏற்படும் போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து குணமடைய வைக்கின்றனர். ஆனால் இதயம் அதிகம் பாதிக்கப்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு திறந்த இதய அறுவை சிகிச்சை ஆகும். இது முடிவதற்கு பல மணிநேரம் ஆகலாம். நோயாளியின் நிலையைப் பொறுத்து, செயல்முறை மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை செலவு மாறுபடலாம். இத்தகைய அறுவை சிகிச்சையை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை சிறப்பாக செய்து வருகிறது.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா பெருந்தொற்றுக்கு முன் வரை மொத்தம் 12 இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் செய்ய முடியாத சில அறுவை சிகிச்சைகளும் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்த பிறகு, கடந்த ஆண்டு துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய பொறியாளர் ஒருவருக்கு வெற்றிகரமாக 13வது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில் 14வது, அதாவது கொரோனாவிற்கு பிறகு 2வது இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் (33) ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு இருந்துள்ளது. 4 மாதத்திற்கு முன் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது இதயம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது.
எனவே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். மேலும், மாற்று இதயத்திற்கு காத்துக்கொண்டு இருந்தனர்.

அந்தசமயம், கடந்த வாரம் 26 வயது நபர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இறந்துள்ளார். அவரது உடல் உறுப்புகளான கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகியவை தானம் செய்யப்பட்டது. இந்த தானத்தை பயன்படுத்தி ராஜிவ் காந்தி மருத்துவமனையின் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மருத்துவர் ப.மாரியப்பன் தலைமையில் மயக்க மருத்துவர் விஜய், இதய அறுவை சிகிச்சை மருத்துவர் சிவன்ராஜ், மோகன்ராஜ், செவிலியர்கள் ஜமுனா மற்றும் பாரதி ஆகியோர், ராஜசேகருக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் ₹1 கோடி செலவாகும்
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மருத்துவர் மாரியப்பன் ஆகியோர் கூறியதாவது: ராஜசேகருக்கு இதயம் பலவீனமாக இருந்தது. அவர் நன்கு எடை மற்றும் உயரமாக இருந்தார். இதனால் அவருக்கு பொருந்தும் இதயம் கிடைப்பதில் கடினமான சூழ்நிலை இருந்தது. அந்த நிலையில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இறந்த ஒருவரின் இதயம் பெற்று வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே வாரத்தில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதற்கு தனியார் மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் செலவு ஆகும். ஆனால் இங்கு முதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமின்றி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதயத்தை பாதுகாக்கும் வழிகள்
* சத்துள்ள பழங்கள், காய்கறிகள் உண்ணுதல், சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.
* உடற்பயிற்சியில் ஈடுபடுவது, தினமும் விளையாடுவது, மிதி வண்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை செய்து கவனித்து வருவது, எண்ணெய்
பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது, சிகரெட், மது வகைகளை தவிர்ப்பது நல்லது.
* நன்றாக தூங்க வேண்டும், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது.

இதய செயலிழப்புக்கு முக்கிய காரணம்
* உடல் பருமன்
* உடல் உழைப்பின்மை
* நீரிழிவு நோய் கட்டுப்பாடின்மை
* தொடர் மனச்சிதைவு நோய்
* தொடர் மருத்துவ புறக்கணிப்பு

The post சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 14வது இதய மாற்று அறுவை சிகிச்சை: ஒரே வாரத்தில் வீடு திரும்பிய நோயாளி appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Govt Hospital ,Chennai ,Rajiv Gandhi Government Hospital ,
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...