×

மகாதீபம் 40 கி.மீ. சுற்றளவு வரை சுடர்விட்டு பிரகாசிக்கிறது தொடர்ந்து தரிசிக்க திரளும் பக்தர்கள் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் ஏற்றிய

திருவண்ணாமலை, நவ.28: திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் ஏற்றிய மகாதீபம் 40 கி.மீ. சுற்றளவு வரை பிரகாசித்து வருகிறது. தொடர்ந்து தீப தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையும், பெருமையும் மிக்கது. விழாவில், மலை மீது ஏற்றப்படும் மகாதீபம் ஆரம்ப காலங்களில் 3 நாட்கள் மட்டுமே பிரகாசித்தது. பின்னர், காலப்போக்கில் 7 நாட்கள், 9 நாட்கள் என நீட்டிக்கப்பட்டு, தற்போது 11 நாட்கள் மகாதீபம் மலை மீது ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவின்போது, மலைமீது ஏற்றப்படும் மகாதீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் சுடர்விடும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், அது உண்மையல்ல. ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு தீபம் மலை மீது ஏற்றப்படும். திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்படும் தீபம், சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவு வரை காட்சியளிப்பது அதன் சிறப்பு அம்சமாகும். அதனை தொலைதூரத்தில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

அதற்காக, தினமும் சுமார் 400 கிலோ நெய், திரி, கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை தினமும் ேகாயிலில் இருந்து முறையாக பூஜை செய்யப்பட்டு மலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு மலைமீது ஏற்றப்படும் தீபம் விடிய, விடிய சுடர்விட்டு காட்சிதரும். தொடர்ந்து அதிகாலையில் தீபத்திற்கு நெய் ஊற்றுவது படிப்படியாக குறைப்பதன் மூலம் தானாக சுடர்விடுதல் நின்றுவிடும். தீபகொப்பரையின் சூடு தணிந்ததும், மீண்டும் அதில் திரி, நெய் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு, மாலை 6 மணிக்கு மீண்டும் ஏற்றப்படுவது மரபு. மகா தீபத்தன்று தரிசிக்க முடியாத பக்தர்கள் 11 நாட்கள் சுடர்விட்டு ஜொலிக்கும் தீபத்தை தரிசிப்பதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். தீபம் ஏற்றும் திருப்பணியை தொன்றுதொட்டு தீப நாட்டார் என அழைக்கப்படும் பர்வதராஜகுலத்தினர் நிறைவேற்றி வருகின்றனர். மீனவ குலத்தில் அவதரித்தவர் பார்வதிதேவி. அவரது தந்தையான பர்வதராஜாவுக்கு சிவபெருமான் அளித்த வாக்குறுதியின்படியே தீபம் ஏற்றும் உரிமையை பெற்றனர் என்பது இதன் பின்னணியில் உள்ள சுவையான ஆன்மிக தகவலாகும்.

ேதாஷம் நீக்கும் தீபங்கள்
அருள்வடிவான அண்ணாமலையை, ஜோதி வடிவாக வணங்கும் வழிபாட்டு முறையே தீபம் ஏற்றுதல். ஒளி புற இருளை அகற்றும். மகாதீபஒளி அகஇருளை அகற்றும். இல்லங்களில் தீபங்களை ஏற்றி வணங்குவதால் மங்களம் பெருகும், செல்வம் தழைக்கும். அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு நாட்களில் அதிகாலை நேரமும், அந்திசாயும் நேரமும் தீபங்கள் ஏற்றுவது சிறப்பு. துபம், மகா தீபம், அலங்கார தீபம், நாகதீபம், விருஷப தீபம், புருஷாமிருக தீபம், ஓலதீபம், கமடதிதீபம், கணுதீபம், வியானன் தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், சிம்மதீபம், துலஜதீபம், நட்சத்திர தீபம், மேருதீபம் என 16 வகை தீபங்கள் உள்ளன.

சிவபெருமானுக்கு உகந்தது மகா தீபம். இறைவன் திருமேனியாக வணங்கப்படும் தீபமலையின் உச்சியில் காட்சிதருவதே மகாதீபம். சிவபெருமானுக்கு 11 தீபங்கள் அல்லது 11 நாட்கள் தீபங்கள் ஏற்றுவது சிறப்பு. ராகு தோஷம் நீங்க 21 தீபங்களும், சனி தோஷம் நீங்க 9 தீபங்களும், குருதோஷம் நீங்க 33 தீபங்களும், திருமண தோஷம் நீங்க 21 தீபங்களும், புத்திர தோஷம் நீங்க 51 தீபங்களும் உகந்தது என்கின்றனர். பருத்தியால் உருவான பஞ்சுதிரி தீபம் ஏற்ற மிகவும் உகந்தது. வெள்ளைத்துணி திரி செல்வம் பெருகவும், சிவப்பு வண்ண துணி திரி திருமண தடை நீக்கவும், மஞ்சள் வண்ண துணி திரி அச்சம் நீங்கி உடல் நலன் பெறவும் பயன்படும். வாழைத்தண்டு நார் திரி, வெள்ளெருக்கந் திரி, தாமரை பூ தண்டு திரி ஆகியவையும் திரிகளுக்கு ஏற்றது.

5 முகம் கொண்ட பஞ்ச முக விளக்கு ஏற்றுவதால், வறுமை தீரும். கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற, தூய நெய் அல்லது நல்லெண்ணெய் உகந்தது. மகாலட்சுமிக்கு ெநய் விளக்கும், திருமாலுக்கு நல்லெண்ணெய் விளக்கும், கணபதிக்கு தேங்காய் எண்ணைய் விளக்கும் ஏற்றது. வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருவோணம் ஆகிய நாட்கள் மற்றும் பவுர்ணமி, சதுர்த்தி, அமாவாசை, பஞ்சமி ஏகாதசி ஆகிய திதிகள், நவராத்திரி, சிவராத்திரி, ஆடி செவ்வாய், ஆடிவெள்ளி, தை செவ்வாய், தை வெள்ளி ஆகியவை தீபம் ஏற்ற உகந்த தினங்களாகும்.

The post மகாதீபம் 40 கி.மீ. சுற்றளவு வரை சுடர்விட்டு பிரகாசிக்கிறது தொடர்ந்து தரிசிக்க திரளும் பக்தர்கள் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் ஏற்றிய appeared first on Dinakaran.

Tags : Mahadeepam ,Thiruvannamalai Deepatri festival ,Thiruvannamalai ,Deepa ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...