×

பஞ்சமூர்த்திகள் விடிய, விடிய மாடவீதியில் பவனி * ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் * இன்று காலை அண்ணாமலையார் கிரிவலம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை, நவ.28: திருவண்ணாமலையில் விமரிசையாக நடந்து முடிந்த கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, மகா தீபத்தின்போது காட்சியளித்த பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் விடிய, விடிய பவனி வந்து அருள்பாலித்தனர். மேலும், ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடந்தது. திருவண்ணாமலையில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் தொடர்ந்து கோலாகலமாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான நேற்று முன்தினம், 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. வரலாறு காணாத அளவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.

தீபத்திருவிழா உற்சவம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் தங்க கொடிமரத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க சிவகொடியை சிவாச்சாரியார்கள் இறக்கினர். அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மகா தீபத்தின்போது தங்க விமானங்களில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள், கோயிலில் இருந்து புறப்பாடாகி, மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நள்ளிரவு தொடங்கிய மாடவீதி வலம் விடிய, விடிய நடந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்தது.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நிறைவடைந்ததை தொடர்ந்து, 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, முதல் நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சந்திரசேகரர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ள ஐயங்குளத்தை சுற்றிலும், மின்னொளி மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், குளத்தை சுற்றிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வீரர்களும், மருத்துவக் குழுவினரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்ல உள்ளனர். மலைமீது மகாதீபம் ஏற்றிய பிறகு, இறைவன் கிரிவலம் செல்வது தனிச்சிறப்பு. அப்போது, பராசக்தி அம்மனும் உடன் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். மேலும், தீபத்திருவிழா 2ம் நாள் தெப்பல் உற்சவமான இன்று இரவு, ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பலில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து, நாளை இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

The post பஞ்சமூர்த்திகள் விடிய, விடிய மாடவீதியில் பவனி * ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் * இன்று காலை அண்ணாமலையார் கிரிவலம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Panchamurthys ,Vidya Madaveedi ,Chandrasekhar Thepal Utsavam ,Aiyangulam ,Annamalaiyar Krivalam ,Tiruvannamalai Karthikai ,Thiruvannamalai ,Kartika Deepatri Festival ,Tiruvannamalai ,Maha Deepa ,Mata Veedi ,
× RELATED ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா