×

லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் 2வது நாளாக காட்சியளித்த மகாதீபம்

திருவண்ணாமலை, நவ.28: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம், தொடர்ந்து 2வது நாளாக நேற்று காட்சியளித்தது. கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்றும் கிரிவலம் சென்று வழிபட்டனர். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. அதையொட்டி, அன்று மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர அண்ணாமலை மீது ஏற்றப்பட்ட மகாதீபத்தை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் ஆன்மிக வழக்கப்படி, மலை மீது ஏற்றப்படும் மகாதீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சிதரும். அதையொட்டி, ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அதற்காக, இத்திருப்பணியை நிறைவேற்றும் பர்வதராஜகுலத்தினர் மலையில் முகாமிட்டு திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

அதன்படி, டிசம்பர் 6ம் தேதி வரை மலை மீது மகாதீபத்தை தரிசிக்கலாம். தீபத்திருவிழாவின் முதல் நாளன்று ஏற்றுவது மகாதீபம், 2வது நாளன்று ஏற்றுவது சிவாலய தீபம், 3ம் நாளன்று ஏற்றுவது விஷ்ணு தீபமாகும். அதன்படி, 2வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு, அண்ணாமலை மீது சிவாலய தீபம் காட்சியளித்தது. அப்போது, அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதை மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர். மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் அகல்விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். மலை மீது மகாதீபம் ஏற்றுவதற்காக, நெய் மற்றும் திரி, கற்பூரம் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவை அண்ணாமலையார் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது. தீபம் ஏற்றும் முறைதாரர்களான பர்வதராஜகுலத்தினர் மற்றும் கோயில் திருப்பணி ஊழியர்கள் ஒருங்கிணைந்து இப்பணியை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் மாலை 3.58 மணிக்கு தொடங்கி, நேற்று மாலை 3.08 மணிக்கு நிறைவடைந்தது. மகாதீபத்திற்கு அடுத்த நாளும் பவுர்ணமி அமைந்திருந்ததால், திருவண்ணாமலை நகரில் நேற்றும் பக்தர்கள் வெள்ளம் குறையவில்லை. எனவே, கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தின் 2ம் நாளான நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். பகல் 1 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை நடை திறக்கும் முன்பே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதனால், ராஜகோபுரத்தின் வெளி பிரகாரத்தில், தென்ஒத்தைவாடை தெரு வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. தரிசன வரிசையை விரைவுபடுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் செய்திருந்தனர். ஆனாலும், பக்தர்கள் வருகை அதிகரித்ததால், தரிசனத்துக்கான நேரம் அதிகரித்தது. மேலும், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் 2வது நாளாக காட்சியளித்த மகாதீபம் appeared first on Dinakaran.

Tags : Pournami Krivalam temple ,Mahadeepam ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Kartika Deepatri festival ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...