திண்டுக்கல், நவ 28: திண்டுக்கல் நத்தம் ரோடு வாழைக்காய்பட்டி பிரிவில் உள்ள பயணிகள் நிழற்குடையை இடித்து ஆவின் டீ கடை வைப்பதற்காக செட் அமைத்துள்ளனர். இதனை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் – நத்தம் நெடுஞ்சாலையில் வாழைக்காய்பட்டி பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இங்கு கண்ணாரம்பட்டி, தண்டகாரப்பட்டி, சூசைபுரம் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், கிராம மக்கள் வாழைக்காய்பட்டி பஸ் ஸ்டாப்பை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் பஸ் ஸ்டாப்பை அகற்றி ஆவின் பூத் அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பஸ் ஏற முடியாமல் அவதிப்படுகின்றனர். நிழற்குடையை மறைத்து பூத்து அமைத்துள்ளதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பஸ் ஸ்டாப் அருகே டீ கடை அமைத்தால் போக்குவரத்துக்கு கடுமையான இடையூறு ஏற்படும். இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நிழற்குடை முன்பு அமைக்கப்பட்டுள்ள கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து கட்டிய நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வாழைக்காய்பட்டி பிரிவில் டீ கடைக்காக பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.